உள்ளவளல்லள், காய்ந்தீயல் - (வீணே எங்களைச்) சினந்து மொழியல் வேண்டா. (என்று தோழி செவிலித்தாயிடங் கூறினாள்.) (ப-ரை.) வெகுள வேண்டா அன்னாய்! குற்றமிலள் இவள் ; மிக்க சிவந்தநீர் தாழ்ந்தோடுங் கான்யாற்றுள் தேனோடுங் கலந்து வந்த அருவிநீரைக் குடைந்தாடுதலான் இவள் கண்கள்தாஞ் சிவப்புற்றன : ஆதலான். (விரி.) அன்னை - அண்மைவிளி. தாம் - அசைநிலை. பகற்குறி - தோழியினுதவியால் பகற்கண்ணே தலைமகனைத் தலைமகள் கண்டு கூடுமிடம். இது தினைப்புனத்தின் அருகிலுள்ள சோலையாகும். அங்குச் சென்ற திரும்பிய தலைமகள் தினைப்புனத்தின் கண்ணே தன்னைக் காணவந்த செவிலித்தாயினைக் கண்டு திகைத்து நின்றாள். செவிலி தலைமகளைக் கண்டு அவள் கண்கள் சிவப்புற்றமைக்குக் காரணம் யாதென வினவினள். இந்நிலையினைத் தலைமகன் தினைப்புன வேலியின் வெளிப்புறமாக நின்று நோக்கிக் கொண்டிருந்தனன். அப்பொழுது தோழி தலைமகட்குப் புணர்ச்சியாலுண்டாகிய கட்சிவப்பினை அருவியாட்டத்தா லுண்டாயதெனச் செவிலிக்குக் கூறி, தலைமகனுக்கும் தலைமகளை விரைவில் வரைந்துகொள்வது நன்றெனப் புலப்படக் கூறிய செய்யுளாகுமிது. படைத்து மொழி கிளவி - புதிதாக வொன்றை அமைத்துக் கூறும் சொற்றொடர். காய்ந்தீயல் - வியங்கோள் வினை முற்று. (7) வெறிகமழ் தண்சுனைத் தெண்ணீர் துளும்பக் கறிவளர் தேமா நறுங்கனி வீழும் வெறிகமழ் தண்சோலை நாட! ஒன் றுண்டோ வறிவின்க ணின்ற மடம். [புணர்ந்து நீங்குந் தலைமகனைக் கண்டு தோழி வரைவுகடாயது.]
(பத.) கறிவளர் - மிளகுக் கொடிகள் வளர்ந்து படர்ந்துள்ள, தேமா - தித்திப்பான மாவினது, நறும் - நல்ல, கனி - பழமானது,
|