2. பாலை தலைமகளது செலவுணர்ந்து வேண்டாத மனத்தாளாய்த் தலைமகள் தோழிக்குச் சொல்லியது கழுநீர் மலர்க்கண்ணாய்! கௌவையோ நிற்கப் பொருணீரார் காதலர் பொய்த்தனர் நீத்தார் அழிநீர வாகி யரித்தெழுந்து தோன்றி வழிநீ ரறுத்த சுரம். (பத.) கழுநீர்மலர் - செங்கழுநீர்ப் பூக்களைப் போன்ற, கண்ணாய் - கண்களையுடைய தோழியே! கௌவையோ - (நங்காதலர் பிரிந்தமையா லேற்பட்டுள்ள) அலர்மொழிகள், நிற்க - ஒருபுறமிருக்கட்டும், காதலர் - நந்தலைவர், பொருள் நீரார் - பொருளின் தன்மையே தமது தன்மையாகக் கொண்டவராய், பொய்த்தனர் - (களவுக்காலத்தே கூறிய உறுதி மொழிகளை) மறந்தவராய், அழிநீரவாகி - எங்கும் அழிவுபெற்ற தன்மையினைக் கொண்டு, அரித்து - புன்முதலிய தூசுகளையும் போக்கி, எழுந்து தோன்றி - (பேய்த்தேர் முதலியன) புறப்பட்டு, வழி - பாதையின்கண்ணே, நீர் - உண்ணீர் முதலியன, அறுத்த - இல்லையாய் வறண்டுபோன, சுரம் - பாலைநிலத்தின்கண்ணே, நீத்தார் - (நம்மை) நீங்கிப் போயினார். (இஃதென்னே கொடுமை! என்று தலைமகள் தோழியிடங் கூறினாள்.)
(ப-ரை.) செங்கழுநீர் மலர்போன்ற கண்ணினையுடையாய்! அவர் பிரிந்ததால் நிகழும் அலர் நிற்க, பொருண்மேல் நீர்மையையுடையராய் நங்காதலர் முன் சொல்லிய சொல்லைப் பொய்த்து நம்மை நீங்குவார் போனார்; அங்குள்ளார் அழியும் நீர்மையவாகிப் பசையறு தனக்குத் தோன்றிப்போம்வழியின்கண் நீரறுத்த சுரங்களின்கண்ணே.
(விரி.) பாலை - பிரிதலும் பிரிதனிமித்தமுமாம். கௌவையோ - ஓ : இரக்கப்பொருள். வேண்டாத - உடன்படாத. பழைய வுரையில், “பசையறுதனக்கு,” என்பதை, “பசையறுதலுற்று,” என மாற்றிக்கொள்வது பொருத்தமாகக் காணப்படுகிறது. (11)
|