யான்பிரியத் தலைமகளாற்றுமோ நீ அறிவாயாகென்ற தலைமகற்குத் தோழி சொல்லியது முரிபரல வாகி முரணழிந்து தோன்றி யெரிபரந்த கான மியைபொருட்குப் போவீர்! அரிபரந்த வுண்கண்ணாள் ஆற்றாமை நும்மின் தெரிவார்யார் தேரு மிடத்து. (பத.) முரி - உடைந்துபோன, பரலவாகி - பருக்கைக் கற்களையுடையவாய், முரண் அழிந்து - வலிகெட்டு, தோன்றி - காணப்பட்டு, எரி - காட்டுத்தீயானது, பரந்த - பரவியிருக்கப்பட்ட, கானம் - காட்டின்கண்ணே, இயை - எல்லாவற்றையுமுண்டாக்குவிக்கும், பொருள் கு - பொருளினைத் தேடும்பொருட்டு, போவீர் - செல்கின்ற திருவாளரே! அரி பரந்த - செவ்வரி பரந்த, உண் கண்ணாள் - மையுண்ட கண்களையுடைய தலைமகள், ஆற்றாமை - (உமது பிரிவால் ஆற்றுவதும்) ஆற்றாது வருந்தும் தன்மையும், நும்மின் - உம்மைப் போன்று, தேரும் இடத்து - நன்காராயுங்கால். தெரிவார் யார் - அறிபவர் எவர்? (யான் அதனை அறியவல்லேனல்லேன், என்று தோழி தலைமகளிடங் கூறினாள்.)
(ப-ரை.) முரிபரந்த பருக்கையினையுடையவாய் வலியழிந்து தோன்றி, எரிபரந்த கானத்தின்கண் இயற்றும் பொருட் பொருட்டுச் செல்வீர்! அரிபரந்த உண் கண்ணாள் ஆற்றாளென்னுந் திறத்தை நும்மைப்போல, பிறரறிகிற்பார் யார் ஆராயுமிடத்து?
(விரி.) முரிபரல் : வினைத்தொகை. அறிவாயாக + என்ற = அறிவாயாகென்ற: அகரந் தொகுத்தல்விகாரம். நும்மின் - இன் : ஐந்தாவதனுருபு; ஒப்புப்பொருளது. (12) பருவங் கண்டழிந்த தலைமகள் தோழிக்குச் சொல்லியது ஓங்கு குருந்தோ டரும்பீன்று பாங்கர் மராஅ மலர்ந்தன தோன்றி விராஅய்க் கலந்தனர் சென்றார் வலந்தசொ லெல்லாம் பொலந்தொடீஇ பொய்த்த குயில்.
|