15
 

(ப-ரை.) சிறிய புல்லிய புறவினொடு சிறிய புல்லூறு வெகுளும் வழியரிய நீள்சுரத்தின்கட்டங்குவர் கொல்லோ? தோழி! தளிரினது அழகு போன்றிருந்த என்மேனி பசப்ப, நம்மேலுள்ள அருளினை ஒழிந்து நிறைந்த பொருளினை வேட்ட வேட்கையை யுடையவர்.

(விரி.) எழால் - ஒருவகைப் பறவை. இது பழையவுரையில் புல்லூறு எனக் காணப்படுவது ஆராயவேண்டுவதாம். கொல் : ஐயப்பொருள் தரு மிடைச் சொல்.

(15)

புணர்ந்துடன் போகிய தலைமகன் தலைமகளை
ஆற்றுவித்துக் கொண்டு சொல்லியது

கருங்கான் மராஅ நுணாவோ டலர
இருஞ்சிறை வண்டினம் பாலை முரல
அரும்பிய முள்ளெயிற் றஞ்சொல் மடவாய்!
விரும்புநாம் செல்லு மிடம்.

(பத.) அரும்பிய - சிறிதே தோன்றிய. முள் - கூர்த்த, எயிறு - பற்களையும், அம் - அழகிய, சொல் - சொற்களையுமுடைய. மடவாய் - இளமையான பெண்ணே! நாம் செல்லும் - நாமிருவருங் கூடிக் கலந்து கொண்டாடிச் செல்லும்படியான, இடம் - இவ்விடமாகிய இவ்வழியானது, கரும் கால் - கரிய அடிப்பாகத்தையுடைய, மராம் - மராமரம், நுணா ஓடு - நுணாமரத்தினோடு (சேர்ந்து,) அலர - மலரப் பெற்றும், இரும் சிறை - பெரிய சிறகுகளையுடைய, வண்டு இனம் - வண்டுக் கூட்டங்கள், பாலை - பாலைப் பண்ணினை, முரல - பாடப் பெற்றும், விரும்பும் - (நம்மை) அன்புடன் வரவேற்பதைக் காண்பாய் (என்று தலைமகன் தலைமகளிடங் கூறினான்.)

(ப-ரை.) கருங்காலினையுடைய மராமரங்கள் நுணாவொடு மலர, இருஞ்சிறை வண்டினங்கள் பாலையென்னும் பண்ணினை முரல, அரும்பிய முள்ளெயிற்றினையும், அழகிய சொல்லினையுமுடைய மடவாய்! நாம் செல்லும் வழியை விரும்புவாய்.

(விரி.) மராஅம் : செய்யு ளிசைநிறையளபெடை. நுணா - ஒருவகைமரம் : தணக்கமரமெனவும் படும். இது, மலைநாட்டில் மஞ்சணத்தி மரத்திற்குரிய பெயராக வழங்குகின்றது.

(16)