கெதிர்வன போலிலவே யெல்வளையோ கொன்னே யுதிர்வன போல வுள. (பத.) எல் வளையோ - (என் கைகளிலுள்ள) இலங்குகின்ற வளையல்களோ, கதிர்சுட - வெயில் மிகுந்து எறித்தலால், கண் - கணுக்கள், உடைந்து - நெரியப்பெற்று, முத்தம் - முத்துக்களை, சொரியும் - கொட்டுகின்ற, வெதிர் - மூங்கிற்புதர்கள், பிணங்கும் - கலந்து காணும்படியான, சோலை - சோலைகளையுடைய, வியன் - பெரிய, கானம் - காட்டுவழியே, செல்வார்க்கு - செல்ல விரும்பிய நங்காதலர்க்கு, எதிர்வனபோல் - உடன்படுவனபோல, இல - இல்லாமல், கொன்னே - வீணே, உதிர்வனபோல - நிலத்தின் கண்ணே சிந்துவனபோலாக, உள - கைகளினின்று கழலா நின்றன (என்று தலைமகள் தோழியிடங் கூறினாள்.)
(ப-ரை.) வெயில் சுடுதலாற் கண்பிளந்து முத்தங்களைச் சொரியாநின்ற வேய்பிணங்குஞ் சோலையையுடைய அகன்ற கானத்துஞ் செல்லக் கருதினார்க் குடன்படுவன போன்றிருந்தனவில்லை; என்னிலங்கு வளையோ கொன்னே நிலத்தின்கட் சிந்துவன போன்றன.
(விரி.) ஓ - சிறப்புப்பொருள் கொண்டுள்ளது, இல - முற்றெச்சம். ஏ - அசைநிலை. “எதிர்வன போலிதே,” எனவும் பாடம். இதற்கு, எல்வளை செல்வார்க்கு எதிர்வன போலிது (-போன்று), உதிர்வனபோல உள (-கைகளினின்றுங் கழல்கின்றன) எனக்கொள்க. (18) ஆற்றாளெனக் கவன்ற தோழிக்கு ஆற்றுவல் என்பது படச் சொல்லியது கலையொடு மானிரங்கு கல்லத ரத்த நிலையஞ்சி நீள்சுரத் தல்குவர்கொ றோழி! முலையோடு சோர்கின்ற பொன்வண்ண மன்னோ வளையோடு சோருமென் றோள். (பத.) தோழி - தோழியே! பொன் வண்ணம் - பொன் போன்ற என்மேனி, அன்னோ - அந்தோ! முலை ஒடு - முலைக
|