தலைமகன் முதலோர் தலைமகளின் பெற்றோர் மாட்டு மணம் பேசி வரல். (21) தோழி பருவங்காட்டித் தலைமகளை வற்புறுத்தியது மென்முலைமே லூர்ந்த பசலைமற் றென்னாங்கோ னன்னுதன் மாதராய்! ஈதோ நமர்வருவர் பன்னிற முல்லை யரும்பப் பருவஞ்செய் தின்னிறங் கொண்டதிக் கார். (பத.) நல் நுதல் - நல்ல நெற்றியினையுடைய, மாதராய் - அழகிய பெருமாட்டியே! இ கார் - இக்கார் காலத்தே தோன்றிய இம்முகிலானது, பல் நிறம் - நம்பற்களின் வெண்ணிறத்தினையுடைய, முல்லை - முல்லை மொட்டுக்களை, அரும்ப - (முல்லைச் செடிகள்) தோற்றுவிக்கும்படி, பருவம் செய்து - கார்ப் பருவத்தினைத் தோற்றுவித்து, இன் நிறம் - கண்டார்க்கினிய காட்சியாகிய நீல நிறத்தினை, கொண்டது - மேற்கொண்டு விளங்கா நின்றது (ஆகலின்), நமர் - நம்மவராகிய தலைமகனார், ஈதோ - இப்பொழுதே, வருவர் - வந்து சேர்வர், (அங்ஙன மவர் வரின்,) மெல் முலை மேல் - மெல்லிய முலைகளிடத்தே, ஊர்ந்த - (அவர் பிரிவாலுண்டாகி) யமர்ந்த, பசலை - பசப்பு நிறமானது, என் ஆம்கொல் - (இனி நம்மை) யாது செய்யவல்லது? (எதுவும் செய்யவியலாது; துன்புறா திருப்பாயாக, என்று தோழி தலைமகளிடங் கூறினாள்.)
(ப-ரை.) நின்னுடைய மெல்லிய முலைமேலேறிய பசலை நிறம் என்னாங் கொல்லோ? நன்னுதலையுடைய மாதராய்! நமர் ஈதோ வருவர்: பற்போன்றிருந்த நிறத்தையுடைய முல்லைகள் தாம் முகையரும்பப் பருவத்தைச் செய்து கண்டார்க்கினிய நிறத்தைக் கொண்டது இக்கார்.
(விரி.) கார் தோன்றியமையின், அக் கார்காலத்தே வருவதாக உறுதிமொழியுரைத்துச் சென்ற தலைமகனாரும் அத்தோற்றத்தினை யொப்பப் தோன்றுவர் என்பது தோழியின் கருத்து. மற்று: அசைநிலை. வற்புறுத்தல் - தலைமகன் வரவுக்குரிய வேதுக்களை எடுத்துக் காட்டி, வருத்தமுறாதிருக்கும்படி கட்டாயப் படுத்திக்கூறல். (22)
|