(ப-ரை.) பெருங்கடலைப் பருகிய அழகுகொண்ட முகில், கருங்கொடி முல்லைகள் அழகுபெறும்படி முழங்கிப் பெரும் பெயல் தாழாநிற்க, பெயர்ந்து வருவேமென்று காதலர் குறிசெய்தாராகலால், நமக்குப் பொருந்த அவருரைத்த கால மிது.
(விரி.) முகில்கள் இடித்துப் பெயலால் முல்லை தளிர்த்துப் பூக்குமாகலின், “எழிலி கருங்கொடி முல்லை கவின முழங்கிப் பெரும்பெயல் தாழ”, எனலாயினர். பெயர்குறி: வினைத்தொகை. போழ்து : பொழுது என்பதன் மரூஉ. (26) இதுவுமது ஆய ரினம்பெயர்த் தாம்ப லடைதரப் பாய முழங்கிப் படுகடலு ணீர்முகந்து மாயிரு ஞால மிருள்கூர் மருண்மாலை சேயவர் செய்த குறி. (பத.) (தலைவியே!) ஆயர் - இடையர்கள், இனம் - பசுக் கூட்டங்களை, பெயர்த்து - வீடுகட்குத் திருப்பியோட்டி, ஆம்பல் - ஆம்பல் என்னும் பெரிய புல்லாங்குழலை, அடைதர - (வாயின்கண் வைத்து) ஒலித்துக் கொண்டு செல்ல, (முகில்கள்), படு கடல் உள் - ஒலிக்கின்ற கடலினிடத்தே, நீர்முகந்து - நீரினை வாரிக் கொண்டு, பாய - (பல பக்கங்களிலும்) பரவும்படி, முழங்கி - ஆரவாரித்தலானே, மா இரு - மிகவும் பெரிய, ஞாலம் - பூமியின் கண்ணே, இருள் கூர் - ஒளியின்மை மிகும்படியான, மருள் - மயக்கத்தைத் தரும், மாலை - இம் மாலைவேளையே, சேயவர் - (நம்மைப் பிரிந்து) சேய்மைக்கண் சென்றவராகிய நங்காதலர், செய்த - (தாம் திரும்புவதாகக்) கூறிச்சென்ற, குறி - அடையாளமாகும். (ஆகலின் மயங்கேல், என்று தோழி தலைமகளிடங் கூறினாள்.)
(ப-ரை.) ஆயர்கள் இனத்தை ஊரின்கண்ணே பெயர்வித்து ஆம்பற்குழலை மருவ, ஒலிக்குங் கடலுள் நீரை முகந்து பரக்க முழங்குதலான், மாயிரு ஞாலமெல்லாம் இருள்மிக்கு மயங்கும் மாலைப்பொழுது நம்மைப் பிரிந்து சேயராயினார் வருவதற்குச் சொல்லிய குறி.
|