(விரி.) இனம் - ஆனிரை; பசுக்கூட்டம். ஆம்பல் - ஆம்பற்பூவடிவில் அணைசுபண்ணி யமைக்கப்பட்ட குழல். கூர் : உரிச்சொல். முழங்கி : காரணப்பொருளின் வந்த வினையெச்சம். (27) பருவங்காட்டிய தோழி வற்புறுத்தியது அதிர்குர லேறோ டலைகடன் மாந்தி முதிர்மணி நாக மனுங்க முழங்கிக் கதிர்மறை மாலை கனைபெய றாழப் பிதிரு முலைமேற் சுணங்கு. (பத.) கதிர்மறை - (ஞாயிற்றினது) கதிர்கள் மறையப் பெற்ற, மாலை - மாலை வேளையின்கண்ணே, கனை பெயல் - செறிந்த மழையானது, அலை கடல் - அலைகின்ற கடனீரை, மாந்தி - குடித்து, அதிர் - அதிரச் செய்கின்ற, குரல் - ஒளியினையுடைய, ஏறு ஓடு - உருமேற்றாலே, முதிர் - விளைந்த, மணி - மாணிக்கத்தினையுடைய, நாகம் - நாகப்பாம்புகள், அனுங்க - வருந்தும்படி, முழங்கி - ஆரவாரித்து, தாழ - பெய்தலானே, (இனி), முலைமேல் - தலைமகளின் முலைகளிடத்தே, சுணங்கு - தேமல்கள், பிதிரும் - சிதறவிட்டாற்போலப் பரந்து காணப்பெறும் (என்று தோழி தலைமகட்குக் காரப்பருவத்தைத் தெரிவிப்பான் வேண்டிக் கருதிக் கூறிக்கொண்டாள்.) (ப-ரை.) அலைகடலைப் பருகி அதிராநின்ற குரலினையுடைய உருமேற்றோடு முதிர்ந்த மணிநாகங்கள் வருந்தும் வகை முழங்கி, வெயில்மறைந்த மாலைப் பொழுது மிக்க பெயல் தாழ்தலான், இவள் முலைமேற் சுணங்குகள் பிதிர்ந்தாற்போல இனிப்பாக்கும் (விரி.) காட்டிய - காண்பிக்கும்பொருட்டு: செய்யிய என்னும் வாய்ப்பாட்டு வினையெச்சம். வற்புறுத்தல் - வலிந்து கூறல். ஈண்டு, தானே கூறிக்கொள்ளலாம். ஏறோடு - ஓடு: மூன்றன் உருபு; கருவிப்பொருளது. கார்காலமாலை கண்ட தோழி தலைமகட்கு அதனாலுண்டாம் துயரினை எண்ணி இரங்கிக் கூறியதாகுமிது. (28)
|