29
 

4. மருதம்

தலைமகள் வாயின் மறுத்தது

பழனம் படிந்த படுகோட் டெருமை
கழனி வினைஞர்க் கெதிர்ந்த பறைகேட்
டுரனழிந் தோடு மொலிபுன லூரன்
கிழமை யுடையனென் றோட்கு.

(பத.) பழனம் - மருத நிலத்தின்கண்ணே, படிந்த - தவழ்ந்து மேய்ந்து கொண்டிருந்த, படு - (பின் புறமாகப்) படிந்து கிடக்கும், கோடு - கொம்புகளையுடைய, எருமை - எருமையானது, கழனி - வயல்களினிடத்தே, வினைஞர்க்கு - தொழில் செய்யும் மள்ளர்கள் ஊக்கங்கொள்வதற்காக, எறிந்த - ஒலிப்பித்த, பறை - மருத நிலப்பறையினது ஒலியினை, கேட்டு - கேட்கப்பெற்று, உரன் அழிந்து - (மருண்டு) அறிவின்றி, ஓடும் - (மனையை நோக்கி) விரைந்து செல்லுதற்கிடமாகிய, ஒலி - ஒலிக்கின்ற, புனல் ஊரன் - நீர்வளமிக்க மருத நிலத்தூர்த் தலைவன், என் தோள் கு - என்னுடைய தோள்கட்கு, (முன்னேற்பட்ட மணவினை காரணமாக), கிழமை - (மணாளன் என்ற) உரிமையினை, உடையன் - அவன் எங்குச் செல்லினும் நீக்கவியலாது கொண்டுளான். (ஆகலின், அவ்வுரிமை யொன்றே எனக்குச் சாலும்; அவனருள் யாதும் வேண்டுவதின்று, என்று தலைமகள் தலைமகனின் வாயிலாக வந்தவனிடங் கூறினாள்.)

(ப-ரை.) பழனத்தின்கட் படிந்த படுகோட்டினையுடைய எருமை கழனியின்கட் டொழில் செய்வார்க்கு எறிந்த பறையொலியைக் கேட்டு வெருவி, அறிவழிந்தோடும் ஒலிபுனலையுடைய வூரன் என்றோட் குரிமை யுடையன் என்னும் இத்துணையே யமையும்; அவன் எனக்கு நல்குதல் வேண்டுவதில்லை.

(விரி.) வயல்களில் வினைஞர் நெல்லரியுங் காலத்து அவர்களை ஊக்குதல் வேண்டி, ‘கிணை’ என்னும் மருதநிலப் பறையினை முழக்குதல் அக்கால மரபு. படுகோடு, ஒலிபுனல்: வினைத்தொகைகள். கிழமை - உரிமை, சம்பந்தம்.

(31)