கதிர்முலை யாகத்துக் கண்ணன்னார் சேரி யெதிர்நல மேற்றுநின் றாய். (பத.) காஞ்சி நல் ஊர - காஞ்சிமரங்கள் மிகுந்த நல்ல மருதநிலத்தூர்த் தலைவனே! கடையாயார் - கடைப்பட்டவர்களாகிய கீழ்மக்களின், நட்பேபோல் - நலனோடு கூடிய காலத்து நெருங்கி நட்புற்று, அஃதில்லாக் காலத்து விலகிச்செல்லும் மேன்மையினைப் போன்று, உடைய - (தலைமகள் அக்காலத்துக்) கொண்டிருந்த, இள நலம் - இளமை நலத்தா லேற்பட்ட இன்பத்தினை, உண்டாய் - (நன்கு) கைக்கொண்டனை. கடை - பின்பாகிய இப்பொழுது, (இளநல மில்லா அவளைக் கைவிட்டு), அ - அந்த, கதிர் -ஒளியினையுடைய, முலை - முலைகளையும், ஆகத்து - மேனியினையும், (கொண்ட), கண் அன்னார் - நினக்குக் கண்போன்றவர்களாகிய பரத்தையர், சேரி - சேர்ந்து வாழுஞ் சிற்றூர்க்கண்ணே (சேர்ந்து), எதிர் நலம் - (அவர்களின் இளமையாலே கண்களுக்கு இனிமையாக) எதிர்ப்படும் இன்பத்தினை, ஏன்று - எதிர்கொண்டு, நின்றாய் - நிற்றலைச்செய்தனை. (அங்ஙன முள்ள நீ என்னை வாயிலாக வேண்டுவது பெரிதும் மறுக்கற்பாலதாம், என்று தோழி தலைமகனிடங் கூறினாள்.) (ப-ரை.) கீழாயினார் நட்பே போலக், காஞ்சிமரங்களையுடைய நல்லூரனே! என்றோழியுடைய இளநலமெல்லாம் முன்பு நுகர்ந்தாய்; பின்னை அக் கதிர்முலை யாகத்துக் கண்ணனையார் சேரிக்கட்சென்று மற்றவர் இளமை எதிர் நலத்தை எதிரேற்று நின்றாய். (விரி.) காஞ்சி - மருத நிலக் கருப்பொருள். “கடையாயார் நட்பிற், கமுகனையர்,” என்ற நாலடியாரின் தொடர் ஈண்டு ஆராயத்தக்கதாம். சேரி - பலர் சேர்ந்து வாழுமிடம். “கதிர்த்த முலை,” எனினுமாம். அ : பண்டறிசுட்டு. (33) தலைமகள் பாணற்கு வாயின் மறுத்தது செந்நெல் விளைவய லூரன் சிலபகற் றன்னல மென்னலார்க் கீயா னெழுபாண! பாரித்த வல்குற் பணைத்தோளார் சேரியுள் வாரிக்குப் புக்குநின் றாய்.
|