நின்றாள்; தன் மாட்டவர் காதலித்த வண்ணத்தையும், எம்மாட்டுள்ள அவரது இகழ்ச்சியையும். (விரி.) இருங் கூந்தல்: அடையடுத்த சினை யாகுபெயர்; அன்றி: பண்புத்தொகை யன்மொழி. தலைமகன் பரத்தையினைப் பிரிந்து தலைமகள்மாட்டுப் பாணனைத் தூதாக அனுப்பியுளானாகலின், பரத்தையினை, “முல்லைத்தார் சேர்ந்த விருங்கூந்தல்,” என அவள் கற்பாற்றி யிருத்தல் குறிப்பிடப்பட்டது. (38) வாயில் வேண்டிச் சென்றார்க்குத் தலைமகள் வாயின் மறுத்தது கருங்கயத் தாங்கட் கழுமிய நீலம் பெரும்புற வாளைப் பெடைகதூஉ மூரன் விரும்புநாட் போலான் வியனல முண்டான் கரும்பின்கோ தாயினேம் யாம். (பத.) கரும் - பெரிய, கயத்து - குளத்தினிடமாகிய, ஆங்கண் - அவ்விடத்தே, கழுமிய - முளைத்துள்ள, நீலம் - நீலோற்பல மலரை, பெரும் - பெரிய, புறம் - முதுகினையுடைய, வாளை பெடை - பெட்டை வாளை மீனானது, கதூஉம் - பற்றி மேய்கின்ற, ஊரன் - மருத நிலத்தூர்த் தலைவன், வியன் நலம் - (முன்பு எம்மாட்டிருந்த) மிகுந்த நன்மையாகிய இன்பத்தை, உண்டான் - கைக்கொண்டான், யாம் - (அதனால்) நாம், (அவனுக்கு,) கரும்பின் - (சாறுபிழிந்தெடுத்த) கரும்பின்கண்ணே காணப்படும், கோது ஆயினேம் - சக்கையாக மாறி விட்டோம், விரும்புநாள் - (அக்காலத்து எம்மை) விரும்பிய நாட்களில் (நடந்து கொண்டது), போலான் - போன்றவனாய் (இப்பொழுது) இருக்கின்றானில்லை. (ஆகலின், நீவிர் யாதுஞ் சொல்லாது செல்வீர்களாக, என்று தலைமகள் வாயிலாக வந்தார் மாட்டுக் கூறினாள்.) (ப-ரை.) பெருங்கயத்த இடத்தின்கட் செறிந்த நீலங்களைப் பெரும்புறத்தினையுடைய வாளைப்பெடைகள் கதுவுகின்ற ஊரன் எம்மை விரும்பின நாட்போலான்; எம்முடைய வியனலத்தை முன்னே யுண்டான்; ஆதலான் இப்பொழுது கரும்பின் கோதுபோலவாயினேம்.
|