40
 

முதலியவற்றை விழச்செய்து ஒலி யெழுப்பல் முதலியனவாம்.அவை பொய்த்தலாவது, தலைவனால் அவை நிகழாமல் மற்றொரு நிமித்தத்தால் நேர்வதாம். இதனை நச்சினார்க்கினியர், (தொல். 100. 20.) “அருமை செய்து அயர்ப்பினும்,” என்றதற்கு எடுத்துக்காட்டி, “தீங்கு செய்தாரையும் பொறுக்கிற்பார் தலைவர்” நம்மைத் துறத்தலின், நாம் அறியே மாகியதுபற்றித் தாமும் அறியராயினார் போலுமென அவ்விரண்டும் (தான் அருமையானதும், தலைமகன் அருமையானதும்) கூறினாள் (தலைமகள்) என்பர். நெய்தல் - இரங்கலும் இரங்க னிமித்தமும். இச்செய்யுள் இரங்கலின் பாற்படும்.

(41)

தோழி வரைவு கடாயது

முத்த மரும்பு முடத்தாண் முதுபுன்னை
தந்துந் திரைதயங்குந் தண்ணங் கடற்சேர்ப்ப!
சித்திரப் பூங்கொடி யன்னாட் கருளீயாய்
வித்தகப் பைம்பூணின் மார்பு.

(பத.) முத்தம் - முத்துக்களைப் போன்று, அரும்பும் - மொட்டுக்களை வெளிவிடாநின்ற, முடம் - வளைந்த, தாள் - அடிப்பாகத்தினையுடைய, முது புன்னை - முதிர்ந்த புன்னைமரத்திடத்தே, தத்தும் - தாவிக்குதித்துச் செல்லும்படியான, திரை - அலைகள், தயங்கும் - அசைந்தாடிக் கொண்டிருக்கும்படியான, தண் - குளிர்ந்த, அம் - அழகிய, கடல் சேர்ப்ப - கடற்றுறைமுகத்திற்குரிய தலைவனே! சித்திரம் - அழகிய, பூ கொடி - பூத்துமலர்ந்துள்ள கொடியினை, அன்னாட்கு - ஒத்தஎந் தலைமகட்கு, வித்தகம் - வியப்புமிக்க, பை பூண் - பசிய பொன்னாலாகிய அணியினைப் பூண்டுள்ள, நின் மார்பு - உனது மார்பின்கண்ணதாகிய இன்பத்தினை, அருள் - (மணவினையாகிய) பேரன்புச் செயலானே, ஈயாய் - நல்குவாயாக (என்று தோழி தலைமகனிடங் கூறினாள்).

(ப-ரை.) முத்தம்போல வரும்பாநின்ற முடத்தாண் முதுபுன்னையின்கண் வந்து தத்தாநின்ற திரைகள் துளங்காநின்ற தண்ணங் கடற் சேர்ப்பனே! எழுதிய சித்திரப்பூங்கொடி யன்னாட்கு நின்னருளினாலே நல்காய்; வித்தகப் பைம்பூணையுடைய நின் மார்பினை.