(விரி.) சித்திரப் பூங்கொடி - ஓவியத்தேயமைத்த பூக்கள் நிறைந்த கொடி யெனலுமாம். இதனை நச்சினார்க்கினயார், (தொல். கள, 23) “வேண்டாப்பிரிவினும்,” என்பதற்கு எடுத்துக்காட்டித் தலைவன்றான் புணர்ச்சியை விரும்பாது, பிரிவை விரும்பியை விடத்துத் தோழி தலைவன்மாட்டுக் கூறியது என்பர். (42) அல்ல குறிப்பட்டுப் பெயர்ந்த தோழி, தலைமகன் சிறைப்புறத்தானாகத் தலைமகட்குச் சொல்லுவாளாய்ச் சொல்லியது எறிசுறா நீள்கட லோத முலாவ நெறியிறாக் கொட்கு நிமிர்கழிச் சேர்ப்ப னறிவறா வின்சொ லணியிழையாய்! நின்னிற் செறிவறா செய்த குறி. (பத.) அறிவு - எனது அறிவின்கண், அறா - நீங்காது நிலைத்திருக்கும்படியான, இன்சொல் - இன்பத்தை விளைக்குஞ் சொற்களையுடைய, அணி இழையாய் - அழகிய அணிகலங்களை யணிந்த தலைவியே! சுறா - சுறாமீன்கள், எறி - துள்ளி விளையாடும்படியான, நீள் - பெரிய, கடல் ஓதம் - கடலலைகள், உலாவ - முன்னும் பின்னுமாகத் திரிய, (அவற்றின்கண்), நெறி - (வரிவரியான) நெறிவுகளையுடைய, இறா - இறால் மீன்கள், கொட்கும் - சுழன்று திரிதற்கிடமாய, நிமிர் - நீண்டு செல்லும்படியான, கழி கடற்கால்வாய்களையுடைய, சேர்ப்பன் - கடற்கரைத் தலைவன், நின் இல் - உனது மனையின் (புறத்தே யுள்ள தோப்பின்கண்ணே), செய்த குறி - செய்த இரவுக்குறிகளாகிய வருகையைத் தெரிவிக்கும் அடையாளங்கள், செறிவு - நிறைதலை, அறா - நீங்கா. (ஆயினும் பயனிலவாகப் போயின, என்று தோழி தலைமகளிடங் கூறினாள்.) (ப-ரை.) எறிசுறாவையுடைய நீள்கடலின்கண்ணுள்ள வோதம் வந்துலாவ வரிவரியாயிருந்துள்ள மேனியையுடைய இறாக்கள் சுழன்று திரிதருஞ் சேர்ப்பன் நின்னறிவின்கண் நீங்காதிருந்த இன்சொல் அணியிழையை யுடையாய்! நின்மனையின் புறத்து அச்சேர்ப்பன் செய்த குறிகள் பலகாலு முளவாகா நின்றன.
|