(விரி.) தலைமகளின் இன்சொல் எக்காலும் தோழியின் நினைவகத்தே நிற்பது சிறப்பாமாகலின், ‘அறிவு,’ என்பதற்கு ‘எனது அறிவின்கண்,’ எனக் கண்ணழிக்கப்பட்டது. அல்ல குறி அடிக்கடி மிகுதியாக, ஏற்பட்டுத் தோழியினைப் பன்முறை ஏமாற்றியதாகலின், “செறிவறா செய்தகுறி,” எனலாயினள். நிமிர்தல் - உயர்தல், நீண்டு போதல். (43) தலைமகனைக் கண்ணுற்று நின்ற தோழி வரைவு கடாயது இனமீ னிருங்கழி யோத முலாவ மணிநீர் பரக்குந் துறைவ! தகுமோ குணநீர்மை குன்றாக் கொடியன்னாள் பக்க நினைநீர்மை யில்லா வொழிவு. (பத.) இனம் மீன் - மீன் கூட்டங்களையுடைய, இரும் - பெரிய, சுழி - கடற் கால்வாயினிடத்தே, ஓதம் - அலைகள், உலாவ - வந்து திரிய, மணி - நீலமணிபோன்ற, நீர் - கடனீரானது, பரக்கும் - பரவிச் செல்லும்படியான, துறைவ - துறைமுகத்திற்குரிய தலைவனே! குணம் - நற்குணங்களாகிய, நீர்மை - தன்மை, குன்றா - குறைவு படாத, கொடி அன்னாள் - பூங்கொடி போன்ற தலைமகளின், பக்கம் - இடத்தே, நினை - (மணவினையினை) எண்ணிப் பார்க்கும்படியான, நீர்மை - தன்மையானது, இல்லா - ஏற்படாது, ஒழிவு - நீங்கியிருத்தல், தகுமோ - நினக்குத் தக்கதாமோ ? (என்று தோழி தலைமகனிடம் வினாவினாள்.) (ப-ரை.) இனமீன்களையுடைய இருங்கழியின்கண்ணே வந்து ஓதங்களுலாவ நீலமணிபோன்ற நீர்பரக்குந் துறைவனே! தகுவதொன்றோ குணத்தன்மை குன்றாக் கொடியன்னாள் திறத்து நினையு நீர்மையின்றி யொழிதல் நினக்கு ? (விரி.) நினைநீர்மை : வினைத்தொகை. இல்லா : ஈறுகெட்ட எதிர்மறை வினையெச்சம். அருமை செய்து அயர்த்த தலைமகனைக் கண்ணுற்ற தோழி அவன் வரைதலை வேண்டிக் கூறியதாகுமிது. இதனை நச்சினார்க்கினியர், “காதன் மிகுதி உளப்படக் களனும் பொழுதும் வரைநிலை விலக்கி வரைந்தருள வேண்டுமெனத் தோழி வரைவுகடாய” தென்பர் (தொல். கள. 23) (44)
|