43
 

இதுவுமது

கடல்கொழித் தீட்ட கதிர்மணி முத்தம்
படமணி யல்குற் பரதர் மகளிர்
தொடலைசேர்த் தாடுந் துறைவ! என்றோழி
யுடலுள் உறுநோய் உரைத்து.

(பத.) படம் - (பாம்பின்) படத்தினை யொத்த, மணி - அழகிய, அல்குல் - நிதம்பத்தினையுடைய, பரதர் மகளிர் - நெய்தனிலப் பெண்கள், கடல் - கடலின்கண்ணுள்ள அலையானது, கொழித்திட்ட - அலசிக் கரையிலிட்ட, கதிர் - ஒளியினையுடைய, மணி முத்தம் - முத்துக்களாகிய மணிகளை, தொடலை சேர்த்து - மாலையாகக் கட்டி, ஆடும் - விளையாடும், துறைவ - கடற் றுறைமுகத்திற்குரிய தலைவனே! என் தோழி - என்னுடைய தோழியாகிய தலைமகள், உறுநோய் - (நீ விரைந்து வரைந்து கொள்ளாமையால்) உறுகின்ற துன்பங்களை, உரைத்து - (வெளிப்படையாக என்பாற்) சொல்லி, உடலும் - (மிகுதியும்) வருந்தாநிற்கின்றாள். (ஆகலின், அவளை விரைந்து வரைந்து மகிழ்விப்பாயாக, என்று தோழி தலைமகனிடங் கூறினாள்.)

(ப-ரை.) கடல் கொழித்துச் சிந்திய கதிர்மணி முத்தத்தைப் படம்போன்ற அழகிய அல்குற் பரதர் மகளிர் மாலையாகச் சேர்த்து விளையாடும் துறைவனே! என் தோழி மறுகாநிற்கும் தன்னுறு நோயை எனக் குரைத்து.

(விரி.) கொழித்தல் - அலசி யெடுத்தல்: கரையிற் சிதறல். உறுநோய் - மிக்க துன்பமெனினுமாம். ஆயின் : உரிச்சொற்றொடராகக் கொள்க.

(45)

இதுவு மது

முருகியல் கான லகன்கரை யாங்கண்
குருகின மார்க்குங் கொடுங்கழிச் சேர்ப்ப
மருவி வரலுற வேண்டுமென் றோழி
உருவழி வுண்ணோய் கெட.