கண்ணே, மலர் - பீர்க்கம் பூவினை யொத்த, பசப்பு - பசலை நிறமானது, ஊர - மேற்கொள்ள, துறந்தான் - பிரிந்து சென்றான், (அதனால் என்னுடல் மெலிய), என் - என்னுடைய, மெல் தோள் - மெல்லிய தோள்களிலுள்ள, வளை - வளையல்கள், தணியும் - (கழன்று) கீழே விழாநின்றன. (என்று தலைமகள் தோழியிடங் கூறினாள்.) (ப-ரை.) அணிந்த பூக்களையுடைய கழிக்கானலின்கண் கண்ட அற்றைநாட் போலான்; மணியெழின் மேனியின்கண் மிக்க பசப்பேறும் வகை துணிகடற் சேர்ப்பன் எம்மை மிகவே துறந்தான் கொல்லோ! என் மென்தோள் வளைகள் நீங்கா நின்றன. (விரி.) கொல் : அசைநிலை. தணிதல் - கீழ் நோக்கிச் செல்லுதல் - கழலுதல். வரைவிடை வைத்துப் பொருள்வயிற் பிரிந்த தலைமகன் வந்து சிறைப்புறமாகத் தலைவியைக் காணவந்து நின்றானாக, அப்பொழுது தோழி தலைமகட்கு நின் குறையினைத் தலைமகற்கு எடுத்தியம்புவாயாக எனக்கூற, அக்காலத்துத் தலைமகன் கூறியதாகுமிது. இதனைத் தொல்காப்பியர், “உரையெனத் தோழிக் குரைத்தல்,” (தொல். கள. 21) என்பர். (47) தோழி தலைமகளை இரவுக்குறி நயப்பித்தது கறங்கு மணிநெடுந்தேர் கண்வா ளறுப்பப் பிறங்கு மணன்மே லலவன் பரப்ப வறங்கூர் கடுங்கதிர் வல்லிரைந்து நீங்க நிறங்கூரு மாலை வரும். (பத.) கறங்கு - ஒலிக்கின்ற, மணி - மணிகளையுடைய, நெடும் - நீண்டுயர்ந்த, தேர் - (நங் காதலரின்) தேரானது, (இனி மேல்), நிறம் கூரும் - (செக்கர்) நிறமிக்க, மாலை - மாலை (வேளையிலே), பிறங்கு - விளங்காநின்ற, மணல்மேல் - மணல் நிறைந்த கடற்கரை வழியாக, அலவன் - (அங்குக் கூடியுள்ள) நண்டுகள், பரப்ப - (நாற்புறமும்) பரவியோடும்படியாகவும், வறம் கூர் - வெம்மை மிகுதற்குக் காரணமான, கடும் கதிர் - கொடிய வெயில், வல் விரைந்து - மிகுதியும் விரைவாக, நீங்க - விலகும்படியாக
|