1

திணைமாலை நூற்றைம்பது

விளக்கவுரை பழைய பொழிப்புரையுடன்.


முதலாவது-குறிஞ்சி.

நறைபடர் சாந்த மறவெறிந்து நாளா
லுறையெதிர்ந்து வித்தியவூ ழேனற்-பிறையெதிர்ந்த
தாமரைபோல் வாண்முகத்துத் தாழ்குழலீர்! காணீரோ
வேமரை போந்தன வீண்டு.

[தலைமகளுந் தோழியும் ஒருங்கிருந்தவழிச் சென்று
தலைமகன் தோழியை மதியுடம்படுத்தது.]

(பதவுரை) நறைபடர் - மணமிக்க பூங்கொடிகள் படர்ந்துயர்ந்த. சாந்தம் - சந்தனமரங்களை, அற - (வேரோடு) கெடும்படி, எறிந்து - வெட்டி, நாளால் - நல்லநாளில், உறை - மழை பெய்யுங் காலத்தை, எதிர்ந்து - மேற்கொண்டு, வித்திய - விதைத்ததனால், ஊழ் - முதிர்ந்த, ஏனல் - தினைப்புனத்தினைக் (காவல் செய்யும்,) பிறை - பிறையாகிய மதியினை, எதிர்ந்த - மேற்கொண்டுள்ள, தாமரைபோல் - தாமரைமலரினை யொத்த, வாள் முகத்து - ஒளியோடு கூடிய முகத்தினைக் கொண்ட, தாழ் குழலீர் - நீண்ட கூந்தலையுடைய பெண்மணிகளே! ஈண்டு - இவ்விடத்தைநோக்கி. போந்தன - வந்தனவாகிய, ஏ மரை - (எமது வில்லினின்று புறப்பட்ட) அம்பினைக் கொண்ட மான்களை, காணீரோ - கண்டிலீரோ? (என்று தலைவன் வினாவினான்.)

(பழையவுரை) நறைக் கொடி படர்ந்துயர்ந்த சந்தனங்களை அற வெட்டி நல்ல நாளால் மழை பெய்யுங்காலத்தை யேற்றுக்கொண்டு வித்தி முதிர்ந்த ஏனலின் கண், பிறையை யேற்றுக்கொண்டதொரு தாமரை மலரைப் போலும் வாண்முகத்தையும், தாழ்ந்த குழலையுமுடையீர்!