விளக்கானது, பீர்தோன்றி - (மழுங்கி எரிதலான்) பீர்க்கம்பூவின் நிறம் பெற்று நிற்றலின், தூண்டுவாள் - அதனைத் தூண்டிவிட்டு நன்கெரியச் செய்வாளின், மெல் விரல்போல் - மிருதுவான விரல்களைப் போன்று, காந்தள் முகை - காந்தள் மொட்டுக்கள், தோன்றிப்பூ - கார்த்திகைப் பூக்களின் மீதே, உற்ற - பொருந்திப் பூத்து நின்றன, கார் - மழை பெயலானே, கானம் - முல்லை நிலமானது, நீர் தோன்றி - எங்கும் நீர் நிரம்பப் பெற்று, தன் பருவம் - தனக்குரிய கார்ப்பருவத்தினை, செய்தது - மேற்கொண்டு விளங்கலாயிற்று, (இங்ஙனமிருக்க,) இன்று - இப்பொழுதினை, என் -யாது கருதி, பருவம் அன்று என்றி - காதலர் திரும்புவதாகச் சொன்ன கார்ப்பருவம் அல்லவென்று சொல்ல முன் வந்தனை? (என்று தலைவி தோழியை வினவினள்.) (ப-ரை.) விளக்கு மழுங்கிப் பீர்நிறம் கோடலான் அவ்விளக்கினைத் தூண்டுவாள் மெல் விரலினைத் தோன்றிப் பூவின் மேற் சென்றன காந்தண் முகைகள் போலும் வகை கார் நீர் தோன்றுதலாற் காரின் பருவத்தைச் செய்தன கானங்கள்; இத்தைக் கண்டும், தடங்கண்ணாய்! எனக்குக் காதலர் சொல்லிய பருவம் அன்றென்னா நின்றி.
(விரி.) என்றி - முன்னிலை யொருமை வினைமுற்று, "காந்தண்முகை, விரல்போல். பூவுற்ற, கானம், தோன்றிப் பருவஞ் செய்தது; அங்ஙனமிருக்க என் பருவ மன்றென்றி," என முடிக்க. (118) உகவுங்கா ரன்றென்பா ரூரா ரதனைத் தகவு தகவன்றென் றோரேன் - றகவேகொல் வண்டுடுப்பாய்ப் பாம்பாய் விரலாய் வளைமுறியாய் வெண்குடையாந் தண்கோடல் வீந்து. (பத.) (தோழியே!) ஊரார் - இவ்வூரிலுள்ள சிலர், உகவும் கார் அன்று -மழைத்துளிகள் மகிழ்வோடு காணப்படும் கார்ப்பருவம் இது அல்ல, என்பார் - என்று சொல்கின்றனர், அதனை - அங்ஙனமவர் சொல்கின்ற போக்கினை, தகவு - நேர்மையானது, தகவு அன்று - (அல்லது) நேர்மையுடையதல்ல, என்று - என்பதாக,
|