ஆய் - பொன் போன்ற பூக்கள் நிரம்பப்பெற்று, காடு எல்லாம் - முல்லை நிலங்களின் எல்லாப் பாகங்களிலும், வண்டு ஓடு - வண்டுகளுடனே, தேன் - தேன் வண்டுகளும், தொடர்ந்து - சேர்ந்து, துத்தம் - துத்தம் என்னும் பண்ணினை, அறையும் - ஒலிக்காநிற்கும், (இதனை,) பீடிலார் என்பார்கள் - (நம்மைப் பருவமல்லாப் பருவத்தைக் கண்டு வருந்தும்) இழிகுணமுடையார் என்று குறை கூறும் இவ்வூரார், காணார் கொல் - (கார்ப்பருவந்தான் என்று) காணமாட்டார்களா? (என்று தலைவி தோழியை வினவினாள்.) (ப-ரை.) நம்மைப் பெருமையிலரென்று சொல்லுவார் காணாதாராகாரே! வளவிய கொன்றைகள் கொம்பெல்லாம் பொன்னாகப் பூக்க. வண்டொடு தேன்கள் துத்தம் என்னும் பண்ணினைத் தம்முட் பொருந்தி ஒலியா நின்றன காடெல்லாம்; வெய்ய கதிரோடு கூடி வெங்கதிரோன் அத்த மலையை அடைதற்கு முன்னே. (விரி.) கொல் - ஐயப் பொருள், "வெங்கதிரால் கோடெல்லாம் பொன்னாக," எனலுமாம். கதிரால் - ஆல் உடனிகழ்ச்சிப் பொருள். (120) ஒருத்தியா னொன்றல பல்பகை யென்னை விருத்தியாக் கொண்டன வேறாப் - பொருத்தின் மடலன்றின் மாலை படுவசி யாம்பல் கடலன்றிக் காரூர் கறுத்து. [இதுவுமது] (பத.) (தோழியே!) யான் - நான், ஒருத்தி - ஒருத்தியாக இருந்தும், ஒன்று அல - ஒன்று அல்லனவாகிய, வேறு ஆ - (துணையன்றிலை விட்டுப் பிரிந்து) வேறாய். பொருந்து இல் - (பின்பு) பொருந்துதலில்லாத, மடல் - பனைமடலின்கண்ணேயுள்ள, அன்றில் - அன்றிற் பறவையும், மாலை - சாயுங்கால வேளையும், படுவசி - பெய்யும் மழையும், ஆம்பல் - ஆம்பற் குழலோசையும், கடல் - கடலும், அன்றி - மேலும், கார் - முகில்களும் (என்று சொல்லப்பட்ட,) பல் பகை - பல பகைகளும், என்னை
|