வழிகடாஞ் சால வரவரிய வார லிழிகடா யானை யெதிர். [இதுவுமது] (பத.) கரவு இல் - குற்றமில்லாத, வளம் மலை - வளங்களையுடைய மலைகளையும், கல் அருவி - கல் என ஒலிக்கும் நீர் வீழ்ச்சிகளையுங் கொண்ட, நாட - (மலை) நாட்டிற் குரிய தலைவனே! ஒரு நீ - ஒப்பற்ற நீ, இரவின் - இரவின்கண், உரம் வில் - வலிய வில்லினையே, வலியாய் - துணையாய்க்கொண்டு (வருகின்ற), வழிகள் - மலை வழிகள், சால - மிகவும், வரவு அரிய - துணையின்றி வருவதற்குக் கூடாதனவாக இருக்கின்றன, இழி - வழியா நின்ற, கடாயானை - மதநீர் பெருகும் யானைகளின், எதிர் - எதிராக, வாரல் - (அவ்வழியே) வாராதிருப்பாயாக, (என்று தோழி தலைவனிடங் கூறினாள்.) (ப-ரை.) பழுதில்லாத வளங்களையுடைய கல்லருவி நாடனே! வலிய வில்லே நினக்கு வலியாய் ஒருநீ இரவின் கண்ணாகத் துணையின்றி வழிகள் தாம் மிகவும் வரவரிய; இழியாநின்ற கடாத்தையுடைய யானைகளின் எதிர்வாரல். (விரி.) கரவு - குற்றம். கல் - ஒலிக்குறிப்பு. தாம் - அசைநிலை. (11) வேலனார் போக மறிவிடுக்க வேரியும் பாலனார்க் கீக பழியிலாள்-பாலாற் கடும்புனலி னீந்திக் கரைவைத்தாற் கல்லா னெடும்பணைபோ றோணேரா ணின்று. [வெறிவிலக்கித் தோழி செவிலிக்கு அறத்தொடு நின்றது] (பத.) வேலனார் - (வெறியாடும் பொருட்டு வர வழைத்த) வேல் கைக்கொண்டபூசாரி, போக - செல்லக்கடவதாக, மறி - (வெறியாடும் பொருட்டுப் பலியிடக் கொண்டுவந்துள்ள) ஆட்டுக் குட்டியினை, விடுக்க - (அதன் துயர்தீர) விட்டுவிடுவாயாக, வேரியும்-(பூசனைக்கு கொண்டு வந்துள்ள) கள்ளினையும், பாலனார்க்கு -
|