ஐந்தாவது - மருதம் செவ்வழியாழ்ப் பாண்மகனே! சீரார்தேர் கையினா லிவ்வகை யீர்த்துய்ப்பான் றோன்றாமு - னிவ்வழியே யாடினா னாய்வய லூரன்மற் றெங்கையர்தோள் கூடினான் பின்பெரிது கூர்ந்து. [பாணற்குத் தலைமகள் வாயின் மறுத்தது.] (பத.) செவ்வழி - செவ்வழிப்பண்ணைச் சிறப்பாகப்பாடும், யாழ் - யாழினைக்கொண்ட, பாண்மகனே - பாணனே! ஆய்வயல் - (நல்ல வென்று பலரால்) ஆராய்ந்து சொல்லப்பட்ட நன்செய் நிலங்கள் மிகுந்த, ஊரன் - மருத நிலத்தூர்க் குரிய தலைவன், சீர் ஆர் - சிறப்பினையுடைய, தேர் - சிறு தேரினை, கையினால் - கைகளினாலே, இவ்வகை - இம்முறையாக, ஈர்த்து - இழுத்துச் சென்று, உய்ப்பான் - (தன் விளையாட்டினை) நடத்துகின்ற என் மகன், தோன்றாமுன் - பிறப்பதற்கு முன்னே, இவ்வழியே - இம்மனையிடத்திலே, ஆடினான் - (விருப்ப மிக்கவனாய் என்னோடு) விளையாடித் தங்கினான், பின் - (என் மகன் பிறந்த) பின்பு, எங்கையர்தோள் - எனக்குப் பின் வந்தவர்களாகிய பரத்தையர்களின் தோள்களில், பெரிது கூர்ந்து - மிகவும் விரும்பியவனாய், கூடினான் - புணர்ந்து மகிழலாயினன். (ஆதலால், யான் தலைவனுக்குத் தக்க தலைவி யல்லேன், என்று தலைவி பாணனிடங் கூறினாள்.) (ப-ரை.) செவ்வழி யாழையுடைய பாண்மகனே! சீரார்ந்த விளையாட்டுத் தேரினைத் தன்கையால் இம்மனையின்கண் ஈர்த்து நடத்துகின்ற என்மகன் பிறப்பதற்கு முன் இம்மனையின்கட் பிரியாது ஆய்வயலூரன் ஒழுகினான்; பின்னை யெல்லாம் எங்கையர் தோளே மிக விரும்பி முயங்கினான்; ஆதலான் இப்பருவம் யாம் அவர்க்குத் தக்கேம் அல்லேம். (விரி.) ஆய்வயலூரன், ஈர்த்துய்ப்பான் தோன்றாமுன், இவ்வழியே ஆடினான்; பின் எங்கையர் தோள் கூர்ந்து கூடினான் என முடிக்க. வாயில் - தூது. மருதம் -
|