பெற்ற யான் தலைவனை மருவுதற்குத் தகுதி யுடையே னல்லன். தகுதியுடையார்பாலே தலைவன் தங்கியுறை வானாக எனத் தலைவி மறுத்தாள் என்பது கருத்து. (125) விளரியாழ்ப் பாண்மகனே! வேண்டா வழையேன் முளரி மொழியா துளரிக் - கிளரிநீ பூங்கண் வயலூரன் புத்தில் புகுவதன்மு னாங்க ணறிய வுரை. [இதுவுமது] (பத.) விளரி - விளரி யென்னும் பண்ணைப் பாடுகின்ற, யாழ் - யாழினைக் கைக்கொண்ட, பாண்மகனே - பாணனே! வேண்டா - (எம்மால்) விரும்பப்படாத செய்திகளை, நீ அழையேல் - நீ கொண்டு வந்து கூறாதா தொழிவாயாக, முளரி - முட்செடிகளைப் போன்ற கொடிய மொழிகளை, மொழியாது - இங்கே கூறிக் காலத்தை நீட்டியாது, உளரி - இவ்விடத்தை விட்டுப் புறப்பட்டு, கிளரி - கிளர்ச்சியுடையவனாய், பூ கண் - தாமரை மலர்கள மலர்ந்த இடத்தையுடைய, வயலூரன் - மருத நிலத்தூர்த்தலைவன், புது இல் - புதிய பரத்தையர் மனையின்கண், புகுவதன்முன் - இன்று போய் நுழைவதற்கு முன்னே, ஆங்கண் - அப்புது மனையின்கண் (சென்று), அறிய - (அங்குள்ள பரத்தையர்கள் தலைவன் வருகின்றான் என்பதை) அறிந்து மகிழும்படி, உரை - (அவர்களுக்குச்) சொல்வாயாக. (என்று தலைவி பாணனிடங் கூறினாள்.) (ப-ரை.) விளரியென்னும் பண்னைச் செய்கின்ற யாழையுடைய பாண்மகனே! யாங்கள் விரும்பாதன அழையா தொழிக; எங்கண்மாட்டு நினக்கு ஈரமல்லாத முளரி போன்ற மொழிகளைச் சொல்லாது இங்கு நின்றும் புடை பெயர்ந்து கிளர்ந்து நீ போய்த் தாமரைப் பூப் போன்ற கண்களையுடைய வயலூரன் இன்று புதுமனையின்கண்ணே புகுவதன்முன் அப்புதுமனைக்கண் நீ சென்று வாராநின்றான் என்று அவனாற் காதலிக்கப்பட்ட பரத்தையர்க்கு உரை.
|