(அதனையுண்ணும்) பான்மையுள்ள மக்கட்கு, ஈக - கொடுத்துவிடுவாயாக, பழியிலாள் - குற்றமில்லாத என் தலைவி (நீ கருதுவதுபோன்று தெய்வக் குறையான் மயங்கினா ளல்லள்,) பால் ஆல் - ஊழ்வினைவலியால், நின்று - (மனவொருப்பாட்டுடன்) நிலைப்பட்டு. நெடும் பணை - நீண்ட மூங்கிலை, போல் - போன்ற, தோள் - தோள்களை, கடும் - விசையோடு செல்லும், புனலில் - யாற்று நீரில், நீந்தி - பாய்ந்து சென்று, கரைவைத்தாற்கு (நீரால் அடித்துப்போகப்பட்ட தன்னை யெடுத்துக்) கரையின்கண் சேர்த்த காதலனுக்கு, அல்லால் - அன்றி, (வேறு எவர்க்கும்,) நேராள் - நல்கி மணம்புரியாள். (அதுவே அவள் மயக்கிற்கு முதலாம், என்று தோழி செவிலியிடங் கூறினாள்.) (ப-ரை.) வெறியைவிட்டு வேலனார் போக; மறியையும் விடுக்க; கள்ளையும் அக்கள்ளினை நுகர்வார்க் கீக; இப்பழியிலாதாள் ஊழ்வலியாற் கடும்புனலுட் பாய்ந்து நீந்தித் தன்னை யெடுத்துக் கரையின்கண் வைத்தாற் கல்லது நெடிய வேய் போன்ற தோளை நல்காள் இறந்து நின்று. (விரி.) வெறி - முருகனுக்குச் செய்யும் சிறப்பு விழா, இங்குத் தலைவனுக்கும் தலைவிக்கும் புனல்தரு புணர்ச்சி கிட்டியதாகக் கூறப்பட்டுள்ளது. (12) ஒருவரைபோ லெங்கும் பல்வரையுஞ் சூழ்ந்த வருவரை யுள்ளதாஞ் சீறூர் - வருவரையு ளைவாய நாகம் புறமெல்லா மாயுங்காற் கைவாய நாகஞ்சேர் காடு. [நெறியினதருமை கூறித் தோழி இரவுக்குறி மறுத்தது]
(பத.) ஒரு வரை போல் - ஒரு மலையினைப் போலவே, எங்கும் - எல்லாப் பக்கங்களிலும், பல்வரையும் - பல மலைகளும், சூழ்ந்த - தம்முள் ஒரளவுயர்ந்து நெருங்கிய, அரு வரை - (கடத்தற்) கரிய எல்லையினுள்ளே, சீறூர் - (எமது) சிற்றூர், உள்ளதாம் - உள்ளதாகும். வருவரை - (நீ கடந்து) வரவேண்டிய அவ்வெல்லையினது, உள் - உட் பாகத்தின்கண்ணே, ஐவாய - ஐந்து வாய்களைக் கொண்ட,
|