அனுப்பிய பலதூதுகளை மறுத்து விட்ட தலைவி விறலியின் தூதினையேற்றுத் தலைவனோடு மகிழ்ந்திருந்தமை கண்ட விறலி, பக்கத்தே யிருந்த தோழியினிடத்தே தனக்கு வாய்த்த வாய்ப்புப் பெரிதெனப் புகன்றதாகுமிச் செய்யுள். விறலி - பாடினி. இவள் இசையினாலும், கூத்தினாலும் தலைவன் முதலியோரை மகிழ்விப்பவள். தாம் - அசைநிலை. (134) என்கேட்டி யேழாய்! இருநிலத்தும் வானத்து முன்கேட்டுங் கண்டு முடிவறியேன் - பின்கேட் டணியிகவா நிற்க வவனணங்கு மாதர் பணியிகவான் சாலப் பணிந்து. [காமக்கிழத்தி தலைமகளின் இல்லற வியல்பினை அறிந்து தலைமகனைத் தன்தோழியிட மிகழ்ந்து கூறியது] (பத.) ஏழாய் - பெண்ணே! கேட்டி - நான் சொல்வதைக் கேட்பாயாக, அவன் - (அன்று நம்மைப் பிரிந்து சென்ற) அத்தலைவன், அணங்கு மாதர் - தெய்வம் போல்பவளாகிய தலைவியின், பின் - பின்னே (சென்று,) கேட்டு-அவள் ஏவுவன செய்து, அணி இகவாநிற்க - மார்பிலணிந்துள்ள அணிகலன்கள் மார்பினை விட்டு முன் செல்லும்படியாக, சால - மிகுதியும், பணிந்து - அவளை வணங்கி, பணி - அவள் கூறுங் கட்டளைகளை, இகவான் - விலக்க விருப்பமில்லாதவனாய் நடக்கின்றான், என் - என்னே! இரு நிலத்தும் - பெரிய பூவுலகத்திலும், வானத்தும் - துறக்கத்திலும், முன் - இதற்குமுன், கேட்டும் - இம்முறையினைக் கேட்டாவது, கண்டும் - கண்டாவது, முடிவு - முடிந்த நிலையினை, அறியேன் - தெரியேன். (என்று காமக்கிழத்தி தன் தோழியிடங் கூறினாள்.) (விரி.) ஏழை - பெண். கேட்டி - முன்னிலையேவ லொருமை வினைமுற்று. தலைவி காமக்கிழத்திக்கு முன்னவளாய் சிறப்புற்றிருத்தலின். "அணங்கு மாதர்," எனப்பட்டாள். காமக்கிழத்தி - தலைவன் இன்பந்துய்த்தல் காரணமாக மேற்கொண்ட பரத்தையரிற் சிறிது சிறப்புள்ளவள். (135)
|