(பத.) (அன்னாய்!) நல் - வளப்பமிக்க, வயல் ஊரன் - மருத நிலத்தூர்த் தலைவனின், நறும் - மணமிக்க, சாந்து - சந்தனக் குழம்பு, அணி - அணியப் பெற்ற, அகலம் - மார்பின் கண்ணே, புல்லி - (நம் செல்வி அன்புடன்) கூடியிருந்து, புடைபெயரா - விட்டு விலகாத, மாத்திரைக் கண் - வேளையிலேயே, புல்லி - (வீட்டருகே) நெருங்கி, ஆர் - பொருந்தியுள்ள, கூட்டு முதல் - நெற் கூடுகளின் உச்சியிலே, உறையும் - தங்கியிருக்கும், கோழி - சேவலானது, துயில் எடுப்ப - (கூவித்) தூக்கத்தினின்றும் எழுப்ப, (அதனா லெழுந்த வண்டின முதலியன) பண் - இசையோடு கூடிய, பாட்டு - பாடல்களை, முரலும் ஆம் - பாடத் தொடங்கிவிடும். (என்று தோழி செவிலித் தாயினிடம் கூறினாள்.) (விரி.) மன்றன் மனை - தலைவனுக்கும் தலைவிக்கும் மண நிகழ்ந்த வீடு. இகுளை - தோழி. அன்பு உறவு - அன்போடு கூடிய ஒற்றுமை. இருவரும் அன்பின் மிகுதியாற் பொழுது புலர்வதுவரை பிரியாது கூடி யுறைகின்றனர் என்பது கருத்து. நெற்கூடுகள் வீட்டினருகிலேயே வைக்கப்படுதல் அக் கால மரபு. இதனை மலை நாடுகளில், அல்லது வயல் சூழ்ந்த வீடுகளில், இப்பொழுதுங் காணலாம். பொருளைப் புலப்படுத்தல் வேண்டி. 'அன்னாய்.' என்ற விளி வரவழைத்துப் கொள்ளப்பட்டது. (143) அரத்த முடிஇ யணிபழுப்பப் பூசிச் சிரத்தையாற் செங்கழுநீர் சூடிப் - பரத்தை நினைநோக்கிக் கூறினு நீமொழிய லென்று மனைநோக்கி மாண விடும்.
[தோழி, தலைமகளின் சேடிகளிலொருத்திக்குச் செவ்வணி யணிந்து விட்டமையினைத் தலைவற்குப் பாங்காயினார் கூறியது.] (பத.) (தலைவனே!) அரத்தம் - செம்பட்டினை, உடீஇ - (தலைவியின் சேடிகளிலொருத்திக்குத் தோழி) உடுத்து வித்து, அணி - (அணிந்துள்ள) செவ்வணிகளெல்லாம், பழுப்ப - நிறமாறும்படியாக, பூசி - (செஞ்சாந்து) அணிந்து,
|