புனங்காக்க வைத்தார்போற் பூங்குழலைப் போந்தென் மனங்காக்க வைத்தார் மருண்டு. [பாங்கற்குத் தலைமகன் கூறியது.] (பத.) திங்களுள் - நிறைந்த மதியின்கண்ணே, வில் - இரண்டு விற்களை, எழுதி - புருவங்களாக வரைந்து வைத்து, தேராது - (பிறர்க்குத் தீங்கா மென்பதை) நினைத்துப் பாராது, வேல் - இரு வேல்களாகிய கண்களை, விலக்கி - அவ்விற்களிடத்திலே மாறுபாடாகப் பொறுத்தி வைத்து, தங்களுள்ளாள் - தமது குலத்தில் வந்த வொருத்தி யென்று, என்னும் - (தாம்) கருதப்படும், தாழ்வினால் - எளிமை காரணத்தினாலே, இங்கண் - இவ்விடத்திலே, பூ குழலை - பூக்கள் நிறைந்த கூந்தலையுடைய தலைவியை, புனம் - தினைப்புனத்தை, காக்க வைத்தார் போல் - காவல் செய்ய வைத்தவர்களைப் போல, மருண்டு -அறிவின்றி, என் மனம் - எனது மனத்தின்கண், போந்து - புகுந்து, காக்க வைத்தார் - காவல் செய்யும்படி வைத்துவிட்டார்கள். (என்று தலைவன் தோழனிடங் கூறினான்.) (ப-ரை.) ஒரு நிறைமதியின் கண்ணே இரண்டுவில்லை எழுதிப் பிறருயிரை யுண்ணுமென்று ஆராயாது இரண்டு வேலினையழுத்தி, தங்கள் குலத்துள்ளா ளொருத்தி யென்று தாங்கள் கருதப்படுந் தாழ்வு காரணத்தால் இவ்விடத்தின்கட் டினைப்புனத்தைக் காக்க வைத்தார் போலப் பூங்குழலை என் மனத்தைப் போந்து காக்க வைத்தார் அறிவின்றி. (விரி.) இது தலைவியைக் கண்டு நிறையழிந்த தலை மகன் தன்னிலையினைத் தோழனிடங் கூறியதாகும், பூங் குழல் - இரண்டாம் வேற்றுமைத் தொகைப்புறத் தன் மொழி. (30) தன்குறையி தென்னான் றழைகொணருந் தண்சிலம்ப னின்குறை யென்னு நினைப்பினனாய்ப் - பொன்குறையு நாள்வேங்கை நீழலு ணண்ணா னெவன்கொலோ கோள்வேங்கை யன்னான் குறிப்பு.
|