சிரத்தையால் - மிகுந்த கருத்தோடு கூடி, செங்குழுநீர் - சிவந்தகுவளை மலர்களை, சூடி - சூட்டி, பரத்தை - (தலைவன் விருப்பத்தினைப் பெற்றுள்ள) பரத்தையானவள், நினைநோக்கி - உன்னைப் பார்த்து, கூறினும் - (வசை மொழிகள்) சொல்வாளாயினும், நீ மொழியல் - (அவளுக்கு எதிராக) நீ ஒன்றும் சொல்லாது திரும்புவாயாக, என்று - என்ற அறிவுரையினை அச் சேடிக்குச் சொல்லி, மனை நோக்கி - (நீ வாழும்) (இப் பரத்தையின்) வீட்டை நோக்கி, மாண - (மகப்பேற்றால் நின் குலம் விளங்கி) மேன்மையுறும்படியாக, விடும் - அனுப்பியுளாள். (நீ இதனைக் காண்பாயாக, என்று தலைவனிடம் பாங்கர்கள் கூறினார்கள்.) (விரி.) உடீஇ - சொல்லிசை யளபெடை. மொழியல் - வியங்கோள் வினைமுற்று. தலைவி பூப்புற்றமையினைப் பரத்தையர்ப் பிரிந்து சென்றுள்ள தலைமகன் தெரிந்து கொள்ளும்படியாக. தோழி சேடிகளி லொருத்திக்குச் செவ்வணி யணிந்து விடுதலும், அதனைக்கண்ட தலைமகன் வீடு திரும்பிவந்து தலைவியை மகிழ்வித்தலும் அக்கால மரபு. பூப்புற்ற நான்காம் நாள்முதல் பன்னிரண்டு நாட்கள் வரை கருவுறுங் காலமாதலின், அக் காலத்தே தலைமகனும், தலைமகளும் கூடி வாழ்தல் மிக இன்றியமையாத தொன்றாகும். (144) பாட்ட ரவம்பண் ணரவம் பணியாத கோட்டரவ மின்னிவை தாங்குழுமக் - கோட்டரவ மத்திரங் கொண்டோங்க லென்ன மகச்சுமந் திந்திரன்போல் வந்தா னிடத்து. [மகற்பெற்ற தலைமகளினைச் செய்பெருஞ் சிறப்பொடு சேர்தற்கண் தலைமகன் மகற்கண்டு மகிழ்ந்த வகையினைத் தோழி கண்டு மகிழ்ந்து கூறியது] (பத.) பாட்டு - பாட்டுக்களாகிய. அரவம் - ஒலியும். பண் - இன்னிசையாகிய. அரவம் - ஒலியும், பணியாத - கோடுதலில்லாத, கோடு -கொம்பாகிய குழலினது, அரவம் - ஒலியும், இன்ன இவை - இம்முறையான பல வொலிகளும்,
|