(விரி.) மாந்தல் - உண்ணல். ஆல் - உடனிகழ்ச்சிப் பொருள். இதுவும் உள்ளுறையுவமமாம். பழனம் - இடவாகு பெயர். (148) புண்கிடந்த புண்மனுநின் னீத்தொழுகி வாழினும் பெண்கிடந்த தன்மை பிறிதரோ - பண்கிடந்து செய்யாத மாத்திரையே செங்கயற்போற் கண்ணினா ணையாது தானாணு மாறு. [உணர்ப்புவயின் வாராது ஊடிய தலைவி மாட்டு ஊடிய தலைமகனை அறிவர் கழறியது] (பத.) (தலைவனே!) புண் கிடந்த - போர்ப்புண்கள் மிகப்பெற்ற, புள் மனு - நிமித்திகன் போன்று மக்கட்கு எதிர்கால வேற்பாடாகச் செய்திகளைக் கூறிச் சென்ற மனு வென்னும் பேரரசனது அற நெறியானது, நின் - உன்னை, நீத்து - நீங்கப் பெற்று, ஒழுகி - (தீய வொழுக்கத்தை நீ) மேற்கொண்டு, வாழினும் - வாழதலைச் செய்தாலும், பண் கிடந்து - நின்னிசைப்பாக்கள் பொருந்தப் பெற்று, செய்யாத மாத்திரையே - பாணர்கள் பாடத் தொடங்குதற்கு முன்னரே. (தொடங்கிய வளவிலே) செம் கயல் - செவ்விய கயல் மீனினை, போல் - போன்ற, கண்ணினாள் - கண்களையுடைய தலைமகள், நையாது - (ஊடலை மேற்கொண்டு) வருந்தாமல், நாணும் ஆறு - வெட்க முறுகின்ற விதத்தாலே, பெண் - பெண்மையாகிய பேரரசுக் குணம், கிடந்தன்மை - அவளிடம் பொருந்திக் கிடக்கும் போக்கு, பிறிது - (இவ்வுலகெங்குங்காணவொண்ணாப்) புதிய காட்சியினைக் கொண்டதாகும். (என்று அறிவர் தலைவனை நோக்கிக் கூறினார்.) (விரி.) மனுவினை நீத்தெழுக வாழ்தல் - பரத்தமை மேற்கொண்டு தலைவியை மறந்து நடத்தல். உணர்ப்பு வயின் வாராது ஊடிய தலைவி - ஒரே பிடிவாதமாய் ஊடலை மேற்கொண்ட தலைமகள். தலைமகளின் பிடிவாதமான ஊடலைக் கண்ட தலைமகன் அவளை நீத்துச் சென்றானாக அதனைக் கண்ட அறிவர் அவனை நெருங்கித் தலைமகளின் அன்புண்மையை விளக்கி அவனை அவளுடன் சேர்ந்து வாழும்படி செய்யப் புகுந்ததாகு மிச் செய்யுள்.
|