இதனை, "இடித்துவரை நிறுத்தலு மவரதாகுங்கிழவனும் கிழத்தியுமவர்வரை நிற்றலின்," (தொல். பொருள். கற்பு 14) என்பதனாற்கொள்க. அவர் அறிவர்: நற்பொருளைக் கற்பிக்கும் பெரியோர். கழறல் - இடித்து வற்புறுத்திக் கூறல். இங்ஙனமே அறிவர் உணர்ப்புவயின் வாராது ஊடினாளாகிய தலைமகளையும் கழறுவர். உணர்ப்பு - ஊடலினின்றுந் தெளிதல். வயின் - வசம். "பண்," என்ற மொழி பழைய பிரதியிற் காணப்பெறாது புதிதாய்க் கருதிக் கொண்டதாகும். அரோ, தான் - அசை நிலைகள். (149) கண்ணுங்கா லென்கொல் கலவையாழ்ப் பாண்மகனே! எண்ணுங்கான் மற்றின் றிவளொடுநே - ரெண்ணிற் கடல்வட்டத் தில்லையாற் கற்பெயர் சேரா ளடல்வட்டத் தாருளரே லாம். [தலைமகன் தலைமகளைப் புணர்ந்து மகிழ்ந்து பாணனிடங் கூறியது] (பத.) கலவை - பலபண்களையுங் கலந்து பாடும், யாழ் - யாழினையுடைய, பாண்மகனே - பாணணே! கண்ணும் கால் - கருதுமிடத்து, என் - யாதாம், (ஒன்று மின்று), எண்ணும் கால் - நீள நினைந்து பார்க்குமிடத்து, இன்று - இப்பொழுது, இவளொடு - (எனக்கின்பத்தைத் தரும்) இத் தலைமகளொடு, நேர் - ஒப்பானவரை, எண்ணின் - கருதிப் பார்த்தால், கடல் வட்டத்து - கடலாற் சூழப்பட்ட மண்ணுலகத்தில், இல்லை - காண்பதற்கில்லையாம், கல் - நடுகல்லினிடத்தே, பெயர் சேராள் - பெயர் சேரப் பெறாதவளாய், அடல் வட்டத்து - வெற்றி மிக்க மேலுகத்திடத்தே, ஆர் - (பொருந்தியுள்ள பெண் பாலருள்) யாரேனும், உளரேல் - இருப்பாராயின், ஆம் - இவட்கு நேராவர், (என்று தலைமகன் பாணனிடங் கூறினான்.) (விரி.) கொல், மற்று, ஆல் - அசைநிலைகள். 'அடல் வட்டத்து, கற் பெயர் சேராள் உளரேல் ஆம்,' என முடிக்க. இதுபாணனை வாயிலாகக் கொண்டு தலைமகளின் ஊடலை நீக்கிப் புணர்ந்து மகிழ்ந்த தலைமகன் கூறியதாகும்.
|