பாயிரம். முனிந்தார் முனிவொழியச் செய்யுட்கண் முத்துக் கனிந்தார் களவியற் கொள்கைக் - கணிந்தா ரிணைமலை யீடிலா வின்றமிழால் யாத்த திணைமாலை கைவரத் தேர்ந்து. (பத.) கணிந்தார் - கணிந்தார் என்னும் கணி மேதாவியார், களவியல் கொள்கை - அகப் பொருளாகிய களவியற் போக்கினை, முனிந்தார் - வெறுத்தவர்களின், முனிவு ஒழிய - வெறுப்பு விலகும்படியாக, கை வர - அவ்வகப் பொருட் போக்குப் பலரின் ஒழுக்கமாக மீண்டுந் தோன்றும்படி, இணைமாலை - தொடுக்கப் பெற்ற மலர் மாலையினைப் போன்ற சொன்னடை பொருணடைகளாலே, ஈடு இலா - (ஒப்புமை கூறுதற் கொரு மொழியு) மிணையாகாத, இன் தமிழால் - இனிய தமிழ் மொழியினாலே, யாத்த - இயற்றிய, முத்து - முத்துக்களைப் போன்ற, செய்யுள் கண் - வெண்பாச் செய்யுட்களில், திணைமாலை - திணைமாலை நூற்றைம்பது என்னும் நூலை, தேர்ந்து - ஆராய்ந்து, கனிந்தார் - கனிவுடன் கூறினார். (விரி.) முத்து என்ற உவமானங் கொண்டு வெண்பா என்பது பெறலாயிற்று. அகப் பொருளைக் காமமென விலக்குவாரை, 'முனிந்தார்,' என்றார். "கணிந்தார்," என்ற மற்றொரு பெயர் கணிமேதாவியார்க்கு அக்காலத்து உண்டு போலும். இது ஆக்கியோன் பெயர் முதலியன கூறுதலின், பாயிரம் ஆயிற்று. இதனை இறுதியிற் கூறியது புறவுரை என்ற பாயிரப் பெயர்ப்பொருள் பற்றி யென்க. திணைமாலை நூற்றைம்பது முற்றியது. |