கண்டிலீரோ? ஏவுண்ட மறை போந்தனவற்றை இவ்விடத்து. (விரிவுரை) குறிஞ்சி - புணர்தலும் புணர்த னிமித்தமுமாகிய வொழுக்கம்: மலைநாட்டில் நிகழ்வது. ஒருங்கு இருந்தவழி - ஒன்றாக விருந்தவிடத்து மதியுடம்படுத்தல் - தோழியின் அறிவுப் போக்கினைத் தலைவன் தனது விருப்பினை நிறைவேற்றற்குத் தகுதியாக மாற்றல். இது பாங்கியிற் கூட்டத்தின்பாற்படும். நாளால்- வேற்றுமை மயக்கம். பிறையெதிர்ந்த தாமரை - இல்பொருளுவமம் “நறைபரந்த சாந்தம்.” எனவும் பாடம். இது கெடுதி வினாவுந் துறை யெனவும் படும். கெடுதி வினாவல் - தான் போக்கடித்த வொன்றைத் தெரிவான் வேண்டிக் கேட்டல். (1) சுள்ளி சுனைநீலஞ் சோபா லிகைசெயலை யள்ளி யளகத்தின் மேலாய்ந்து-தெள்ளி யிதணாற் கடியொடுங்கா வீர்ங்கடா யானை யுதணாற் கடிந்தா னுளன். [தோழி செவிலிக்கு அறத்தொடு நின்றது.] (பத.) தெள்ளி - (உயிரைக் காப்பது பேரறமென்று) தெளிந்து துணிந்து, இதண் ஆல் - பரணினாலே. கடி ஒடுங்கா - காத்துக் கொள்ளுதற் கியலாத நிலையில், ஈர்ம் கடாம் - குளிர்ந்த மதநீரையுடைய. யானை - களிறானது (தலைவியைத்தாக்க வந்த வேளையில்,) உதண் ஆல் - மொட்டம்பினாலே, கடிந்து - (அவ்யானையை) விலக்கித் (தலைவியைக் காப்பாற்றி,) சுள்ளி - அனிச்ச மலரையும், சுனை நீலம் - சுனைக்கண் மலர்ந்த நீலோற்பலப் பூக்களையும். சோபாலிகை - ஒளியினையுடைய. செயலை - அசோக மலரையும். அள்ளி - கொய்து எடுத்து வந்து. அளகத்தின் மேல் - தலைவியின் கூந்தலில். ஆய்ந்தான் - மிக அழகாகப் புனைந்தவனாகிய (கட்டழகன்) ஒருவன், உளன் -(தலைவியின் அகத்தே தனிச் சிறப்புற்று) விளங்குகின்றனன். (என்று தோழி செவிலியின் மாட்டுக் கூறினாள்.)
|