24

அருமலை போன்றிருந்த யானைகளைப் பிணித்துக் கொள்வாருடைய தங்கையுடைய திருமுலைக்குத் தோற்று நாணழிந்து மிக்க அறிவு முதலாயின குணங்கள் நான்கு மழிந்து தளர்ந்துருகி வலியழிதற்கு யாமமைந்தேம்.

(விரி.) "அருமலை மாய்க்குமவர் தங்கை," என்பது, தன்னாற் குறிக்கப்பட்டாள் இன்னால் என விளக்கி நின்றது. தேன் - மலைநாட்டார் குடிவகைகளி லொன்று. பேணுதல் - மனத்தின்கட் கலங்கிப் பின்வாங்கல். அரும்பண்புகள் நான்கு - அறிவு, ஆண்மை, உயர்வு, ஒழுக்கம். எடுத்துக்காட்டு - உதராணம்.

(23)

நறுந்தண் டகரம் வகுள மிவற்றை
வெறும்புதல்போல் வேண்டாது வேண்டி - யெறிந்துழுது
செந்தினை வித்துவார் தங்கை பிறர் நோய்க்கு
நொந்தினைய வல்லளோ நோக்கு.

[தோழி குறைமறாமற் றலைமகன் றனதாற்றாமை
மிகுதி சொல்லியது.]

(பத.) நறும் - மண மிக்க, தண் - குளிர்ந்த, தகரம் - தகரமரம், வகுளம் - மகிழமரம், இவற்றை - என்னும் இவைகளை, வெறும்புதல்போல் - பயனில்லாத புதர்களைப் போல், வேண்டாது - விரும்பாது, ஏறிந்து - (வேரற) வெட்டி யெறிந்து, வேண்டி - (பயிர் செய்தலை) விரும்பி, உழுது - பண்படுத்தி, செந்தினை வித்துவார் - சிவந்த தினையினை விதைப்பவர்களாகிய மலைநாட்டிற் குறிய தலைவர்களின், தங்கை - பின்னவளாகிய தலைவி, பிறர் நோய்க்கு - பிறர்படுந் துன்பினுக்காக, நொந்து - தளர்ந்து, இனைய - வருந்த, வல்லளோ - தகுதியளோ? நோக்கு - (நீ இதனை நன்கு ஆராய்ந்து) பார்ப்பாயாக. (என்று தலைவன் தோழியிடங் கூறினான்.)

(ப-ரை.) நறுவிய குளிர்ந்த தகரம், வகுளம் என்னு மிவற்றைப் பயன்படாத வெறும் புதல் போல விரும்பாது வெட்டியுழுது, விரும்பிச் செந்தினையை வித்துவார் தங்கை பிறர் கொண்ட நோய்க்கு நொந்திரங்க வல்லளோ? ஆராய்ந்து பாராய் தோழி!