25

(விரி.) தகரமரம் - ஐந்து வகை நறு நாற்றப் பொருள்களிலொன்று. குறைமறாமல் - நின் குறையை நீயே சென்று உரை என்று மறுத்துக் கூறிவிடாதபடி. தகரம் வகுள முதலியவற்றை வெறுத்து வெட்டுபவர் தங்கையாகலான் பிறர் நோய் கருத அறியாள் என்பதும், தோழி நெருங்கி அறிவுறுத்தல் இன்றியமையா தென்பதும் தலைவன் கருத்தாம். இதனை
நச்சினார்க்கினியர், "தலைவியைப் பேதமை யூட்டியது," எனக் கொள்வர் தொல். கள. 23.) அங்ஙனமாயின், இதனைத் தோழி கூற்றாகக் கொள்க. தலைவியைப் பேதைமை யூட்டியது - தலைவியினிடத்திற் பேதைமைக்குணம் பெருகியுள்ளதாகத் தோழி தலைவனுக்குச் சொல்லியது.

(24)

கொல்லியல் வேழங் குயவரி கோட்பிழைத்து
நல்லியற் றம்மின நாடுவபோ - னல்லிய
னாமவேற் கண்ணா ணடுநடுப்ப வாரலோ
வேமவே லேந்தி யிரா.

[தோழி தலைமகனை நெறிவிலக்கி வரைவு கடாயது.]

(பத.) கொல் இயல் - கொல்லும் இயல்பினையுடைய, வேழம் - யானைகள், குயவரி - புலியினால், கோள் - கொள்ளப்படுதலினின்றும், பிழைத்து - தப்பி, நல் இயல் - நல்ல தன்மையினையுடைய, தம் இனம் - தங் கூட்டத்தினை, நாடுவ போல் - தேடித் திரிவன போல, இரா - இரவின்கண், ஏமம் - பாதுகாவலாகிய, வேல் - வேற்படையினை, ஏந்தி - கைக்கொண்டு, நல் இயல் - நல்லிலக்கண மிக்க, நாமவேல் - அச்சத்தை யுண்டாக்கும் வேலினையொத்த, கண்ணாள் - கண்களையுடைய தலைவி, நடுநடுப்ப - நடு நடுங்கும்படி, வாரல் - வாராதிருப்பாயாக. (என்று தோழி தலைவனிடங் கூறினாள்.)

(ப-ரை.) கொல்லும் இயல்பினையுடைய யானைகள் புலியினாற் கொல்லப்படுதலைத் தப்பி மிக்க இயல்பினையுடைய தங்கூட்டத்தைத் தேடுவது போலும்; ஆதலான் மிக்க வியல்பினையுடைய அச்சத்தைச் செய்யா நின்ற வேல்போன்ற கண்ணாள் நடுநடுங்கும்வகை வராதொழி வாயாக, அரணாகிய நின் வேலை யேந்தி இரவின்கண்.