(ப-ரை.) நறவ மலரையுஞ் சுனை நீல மலரையும் அசோக மலரையும் கொய்துமுடித்து நின்மகள் குழலின் மேலே ஆராய்ந்து புனைவதுஞ் செய்து பின்னொருநாட்டுணிந்து பரணாற் காவலமையாத ஈர்ங்கடா யானையை மொட்டம்பாற் கடிந்து காத்தும் இப்பெற்றி யுதவி செய்தான் ஒருவனுளன். (விரி.) அறத்தொடு நிற்றல் - களவுப் புணர்ச்சி யுண்மையைச் செவிலி முதலியோர்க்குக் கூறிவிடல். சுள்ளி = நறவம் - அனிச்சம் உதணம் - மொட்டம்பு. இஃது இங்கு அம் சாரியை விட்டு நின்றது. தலைவன் தலைவியை நெருங்குதற்குரிய வழியினை முன்னர்க் கூறியே புனைதலைக் கூற வேண்டியது முறையாகலின், "கடிந்து ஆய்ந்தான்," என விகுதி பிரித்துக் கொண்டுகூட்டுக் கூறப்பட்டதென்க. இதனை, “களிறு தருபுணர்ச்சி,” எனவும், “பூத்தரு புணர்ச்சி,” எனவுங் கூறுவர். இங்கு ‘பூ’, புணர்ச்சிக்கு வாயிலாகாமையின், இது, “களிறுதரு புணர்ச்சி,” எனக் கூறப்படுதலே சாலு மென்க. (2) சாந்த மெறிந்துழுத சாரற் சிறுதினைச் சாந்த மெறிந்த விதண்மிசைச்-சாந்தங் கமழக் கிளிகடியுங் கார்மயி லன்னா ளிமிழக் கிளியெழா வார்த்து. [பகற்குறிக்கண் வந்த தலைமகனைக் கண்டு தோழி செறிப்பறிவுறீஇயது.] (பத.) சாந்தம் - சந்தன மரங்களை, எறிந்து - வெட்டி, உழுத - உழவுத் தொழிலாற் பண்படுத்தப்பட்ட, சாரல் - மலைப் பக்கத்தினிடத்தே, சிறுதினை -(பயிர் செய்யப்பட்ட) இளமையான தினைப்புனத்தின்கண், சாந்தம் - சந்தன மரக்கட்டைகளை, எறிந்த - (கால்கள் முதலியனவாக) இட்டு அமைத்த, இதண்மிசை - பரணின் மீதிலே, (அமர்ந்து,) சாந்தம் கமழ - மெய்யிற் பூசிய சந்தனக் குழம்பு (நாற்புறமுஞ் சென்று) மணக்கும்படி, கிளி கடியும் - கிளிகளை விரட்டும்படியான, கார்மயில் அன்னாள் - கார் காலத்திலே தோகையை விரித்துத் தோன்றும் மயிலை யொத்தவளான தலைவி, இமிழ - (வாய்திறந்து 'ஆயோ,'
|