[தோழி தலைமகளை மெலிதாகச் சொல்லிக் குறைநயப்பக் கூறியது] (பத.) தண் சிலம்பன் - குளிர்ந்த மலைநாட்டுத் தலைவன், தன் குறை - தனக்காக வேண்டிய காரியம், இது என்னான் - இன்னதென எனக்கு விளங்கச் சொல்கின்றானில்லை, தழை கொணரும் - பூந்தழைகளை அடிக்கடி கொண்டுவருகின்றனன், நின் குறை - (தான் நாடிவந்த காரியம்) நின்னால் முடியவேண்டிய கருமம், என்னும் - என்று கருதும், நினைப்பினன் ஆய் - கருத்தோடு கூடியவனாய், பொன் குறையும் - பொன்னினது நிறத்தையும் குறைவுபடுத்தும், நாள் - அன்று பூத்த (மலர்கள் நிரம்பிய) வேங்கை - வேங்கை மரத்தினது, நீழல் உள் - நிழலின் கண்ணும், நண்ணான் - நெருங்கிச் சிறிது பொழுதும் தங்காதவனா யிருக்கின்றனன், (ஆகலின்,) கோள் வேங்கை - வலிமை மிக்க பெரும் புலியினை, அன்னான் - ஒத்தவனாகிய இவனது, குறிப்பு - மனக் கருத்து'எவன் கொலோ - யாதாங் கொல்லோ? (என்று தோழி தலைவியை வினவினள்.) (ப-ரை.) தன் காரியம் இது என்று எனக்கு விளங்கச் சொல்லான், தழையைக் கொண்டு வந்தான், தண் சிலம்பை யுடையான் நின்னான் முடியுங் கருமம் இது என்னுங் கருத்தினனாய்ப் பொன்னிறந் தளரும் நாண்மலர்களையுடைய வேங்கை நிழலின் கண்ணுஞ் சிறிது பொழுதுஞ் சார்ந்திரான், என்னை கொல்லோ! கோள் வேங்கை யன்னானது கருத்து. (விரி.) நாள் - காலவாகு பெயர். நீழல் - நீட்டல் விகாரம். எவன் - அஃறிணைவினா வினைக்குறிப்பு. கொல், ஓ - அசைநிலைகள். மெலிதாக - நயமாக. குறை நயப்ப - குறையேற்று முடிக்க. (31) குறிஞ்சி முற்றும்
|