32

இரண்டாவது-நெய்தல்

பானலந் தண்கழிப் பாடறிந்து தன்னைமார்
நூனல நுண்வலையா னொண்டெடுத்த - கானற்
படுபுலால் காப்பாள் படைநெடுங்கண் ணோக்கங்
கடிபொல்லா வென்னையே காப்பு.

[பாங்கற்குச் சொல்லியது.]

(பத.) பானல் - நெய்தன் மலர்கள் (பூத்துள்ள,) அம் - அழகிய, தண் - குளிர்ந்த, கழி - உப்பங்கழிகளிடத்தே, பாடு - (மீன்கள்) அகப்படும் வழிகளை, அறிந்து - தெரிந்து கொண்டு, தன் ஐமார் - தன் தமையன்மார்கள், நூல் நல - நல்ல நூல்களாற் (பின்னப் பெற்ற,) நுண் - நுட்பமான, வலையால் - வலைகளினாலே. நொண்டு - முகந்து, எடுத்த - பிடித்துக் கொண்டு வந்த, படு புலால் - காயவைத்துள்ள கருவாட்டினை, கானல் - கடற்கரைச் சோலையிலிருந்து, காப்பாள் - (பறவைகள் பற்றிக் கொண்டு போகா வண்ணம்) பாது காப்பவளாகிய தலைவியின், படை - வேற்படையினை யொத்த, நெடும் கண் - நீண்ட கண்களின், நோக்கம் - பார்வையானது, கடி - (கருவாட்டினைக்) காத்தலில், பொல்லா - தகுதி கொள்ளாது, என்னையே - எளியேனையே, காப்பு - (தன்னகப்படுத்திக்) காத்தலில் (வன்மை கொண்டுள்ளது, என்று தலைவன் தோழனிடங் கூறினான்.)

(ப-ரை.) நெய்தற் பூக்களையுடைய தண் கழியின் கண் மீன் பாட்டை யறிந்து தன்னைமார் நூலாற் செய்யப்பட்ட நல்ல நுண்ணிய வலையான் முகந்து எடுத்த படு புலாலைக் கானலின்கணிருந்து காப்பாள் படை நெடுங்கண்ணோக்கம் படு புலாலைக் காக்க மாட்டா, என்னையே காக்கும் அத்துணை.

(விரி.) நெய்தல் - இரங்கலும் இரங்கல் நிமித்தமு மாகிய ஒழுக்கம். பாங்கன் - தோழன். இது பாங்கற் கூட்டத்தின்பாற்படும். படை - ஆயுதப் பொதுப் பெயர். ஏ - பிரிநிலைப் பொருள் கொண்டுள்ளது. கடி பொல்லா - மிகுதியும் துன்புறுத்துவது என்றுமாம்.

(32)