பெருங்கடல் வெண்சங்கு காரணமாப் பேணா திருங்கடன் மூழ்குவார் தங்கை - யிருங்கடலுண் முத்தன்ன வெண்முறுவல் கண்டுருகி நைவார்க்கே யொத்தனம் யாமே யுளம். [இதுவு மது.] (பத.) பெரும் கடல் - பெரிய கடலினிடத்தேயுள்ள, வெண்சங்கு - வெண்மையான சங்குகளை, காரணமா - (பெறுதலே) கருத்தாகக் (கொண்டு,) பேணாது - தம் உயிரைச் சிறிதும் பொருட் செய்யாது, இரும் கடல் - பெரிய கடலினகத்தே, மூழ்குவார் - அமிழ்ந்து முயல்பவர்களாகிய பரதர்களின், தங்கை - பின்னவளாகிய தலைவியின், இரும் கடல் உள் - பெரிய கடலினிடத்தே (விளையும்,) முத்து அன்ன - முத்துக்களை யொத்த, வெண் முறுவல் - வெள்ளிய பற்களின் ஒளியினை, கண்டு - பார்த்து, உருகி - மனந்தளர்ந்து, நைவார்க்கு - வருந்துகின்ற மக்களை, யாம் - நாம், ஒத்தனம் - ஒப்புமையுடையேமாகி, உளம் - இருக்கின்றனம். (என்று தலைவன் பாங்கனிடம் கூறினான்.) (ப-ரை.) பெருங் கடலுள் வெண் சங்கு பெறுதலே காரணமாகத் தங்களுயிரைப் பாதுகாவாது பெருங் கடலினுள்ளே குளிப்பார் தங்கையுடைய இருங் கடலின் முத்தன்ன வெண் முறுவல் கண்டு உருகி நைவார்க்கே பொருந்தி யாம் மேவியுளம். (விரி.) நைவார்க்கு - வேற்றுமை மயக்கம். ஏ - அசை நிலைகள். தங்கையின் முறுவல், முத்தன்ன வெண் முறுவல், எனக் கூட்டுக. (33) தாமரை தான்முகமாத் தண்ணடையீர் மாநீலங் காமர்கண் ணாகக் கழிதுயிற்றுங் - காமருசீர்த் தண்பரப்ப! பாயிரு ணீவரிற்றாழ் கோதையாள் கண்பரப்பக் காணீர் கசிந்து. [புணர்ந்து நீங்குந் தலைமகனைக் கண்ணுற்று நின்ற தோழி வரைவு கடாயது]
|