34

(பத.) கா மரு சீர் - கடற்கரைச் சோலைகள் பல பொருந்திச் சிறப்புற்ற, தண் - குறிர்ந்த, பரப்ப - கடற் பரப்பினையுடைய தலைவனே! தாமரை - தாமரைப்பூவே, முகமா - அழகிய முகமாகவும், தண் - குளிர்ந்த, அடை - இலைகளையுடைய, ஈர் - ஈரமான, மா நீலம் - பெரிய நீல மலர்கள், காமர் - கண்டாரால் விரும்பப்படும், கண் ஆக - கண்களாகவுங் கொண்டுள்ள, கழி - கடற் கழிகளை, துயிற்றும் - உறங்குவிக்கும், பாய் இருள் - பரவி நிற்கும் இருள் (நிரம்பிய இவ்விரவில்,) நீ வரில் - நீ நாளைமுதல் வருவாயாயின், தாழ் - நீண்டு தொங்கும்படியான, கோதையாள் - கூந்தலையுடைய தலைவி, கசிந்து - வருந்தி, கண் - கண்கள், நீர் பரப்ப - நீரினை வெளிவிட, காண் - நீ காண்பாய், (என்று தோழி தலைவனிடங் கூறினாள்.)

(ப-ரை.) தாமரை மலர்கள் தாமே முகமாகக் குளிர்ந்த இலையையுடைய ஈரத்தையுடைய மாநீலமலர்கள் காதலிக்கப்படுங் கண்ணாக, அக்கண்களைக் கழிக்கட்டுயில்வியாநின்ற காமருசீர்த் தண் பரப்பை யுடையானே! பெரிய இருளின் கண் நீ வரிற் றாழ்ந்த கோதையை யுடையாள் இரங்கி அவள் கண்கள் நீர் பரப்பக் காணாய்.

(விரி.) தான் - அசைநிலை. பரப்ப! கழி துயிற்று மிருள் நீ வரில், கோதையாள் கசிந்து, கண் நிர் பரப்பக் காண்(பாய்,) என முடிக்க. காண் - தொகுத்தல் விகாரம் பெற்று வந்துள்ளது.

(34)

புலாலகற்றும் பூம்புன்னைப் பொங்குநீர்ச் சேர்ப்ப
நிலாவகற்றும் வெண்மணற்றண் கானற்-சுலாவகற்றிக்
கங்குனீ வாரல் பகல்வரின்மாக் கவ்வையா
மங்குனீர் வெண்டிரையின் மாட்டு.


[இரவும் பகலும் வாரலென்று தலைமகனைத்
தோழி வரைவு கடாயது.]

(பத.) புலால் - புலவு நாற்றத்தினை, அகற்றும் - விலக் கவல்ல, பூ புன்னை - (நறு நாற்றமிக்க) பூக்கள் மலர்ந்துள்ள புன்னை மரங்கள், பொங்கு - மிகுந்து காணப்படும், நீர் சேர்ப்ப - கடனீர்த் துறைமுகத்திற்குரிய தலைவனே!