நிலா - நிலவொளியினையும், அகற்றும் - வென்று விலக்கும் படியான, வெண் மணல் - வெள்ளிய மணல் பரந்த, தண் - குளிர்ந்த, கானல் - கடற்கரைச் சோலைக்கண், (நீ நாடோறும்,) கங்குல் - இராக் காலத்திலே (வந்து அதனாலுண்டாகும்,) சுலா - (தலைவியின் மனச்) சுழற்சியினை, அகற்றி - விலக்கும் பொருட்டு, நீ வாரல் - நீ வாராதிருப்பாயாக, பகல்வரின் - (அதுதவிர்ந்து) பகல் வேளையில் நீ வருவாயாயின், மங்குல் நீர் - மேகம் போன்ற நீரினையும், வெண் திரையின் மாட்டு - வெள்ளிய அலைகளையுமுடைய கடற்கரையின் பக்கங்களிலெல்லாம், மா - மிகுதியும், கவ்வை- (பிறரால் தூற்றிக் கூறப்படும்) பழிச் சொற்கள், ஆம் - தோன்றும். (ப-ரை.) புலானாற்றத்தை நீக்கும் பூக்களையுடைய புன்னைப் பொங்குநீர்ச் சேர்ப்பனே! நிலாவினதொளியை வென்று நீக்கும் வெண்மணற் றண் கானலின்கட் கங்குலின் கண்ணே வருதலின், இவளாவி வருந்தலைப் பெருக்கி நீ வாராதொழிக; பகல்வருவையாயிற் பிறரால் அலர் தூற்றப் படுங் கவ்வை பெருகும், மங்குல் போன்ற நீரையும் வெண்டிரையையுமுடைய கடன் மருங்கின். (விரி.) அகற்றல் - விலக்கல், பெருக்கல். கவ்வை - பழிச் சொல். அலர் - புறத்தே கூறும் பழிப்புரை. வாரல்-அல்லீற்று எதிர்மறைவியங்கோள். சுலா - யாது செய்தென்று தோன்றாது மனத்தின்கண் உண்டாம் தடுமாற்றம் அகற்றி- அகற்ற; எச்சத்திரிபு. (35) முருகுவாய் முட்டாழை நீண்முகைபார்ப் பென்றே குருகுவாய்ப் பெய்திரை கொள்ளா - துருகிமிக வின்னா வெயில்சிற கான்மறைக்குஞ் சேர்ப்ப! நீ மன்னா வரவு மற. [தோழி வரைவு கடாயது] (பத.) முருகு-நறு நாற்றம், வாய்- வாய்க்கப் பெற்றுள்ள, முள் தாழை- முள்ளையுடைய தாழைமரத்திற் (றோன்றிய,) நீள்முகை - நீண்ட மொட்டுக்களை, குருகு - நாரைகள், பார்ப்பு என்று - (தம்முடைய) குஞ்சுகள் என்று கருதி, இரை - (தாம் கொண்டுவந்த) இரையினை
|