வாய் - (அம்மொட்டுக்களின்) வாயிலே, பெய்து - புகட்டி, கொள்ளாது - (அவ்விரையிற் சிறிதும் தாம்) அருந்தாது, உருகி மிக - மிகுதியும் மன இளக்கங் கொண்டு, இன்னா - துன்பினைத் தரும்படியான, வெயில் - கதிர் வெப்பத்தினை, சிறகால் - தம்முடைய சிறகுகளினாலே, மறைக்கும் - (அம்மொட்டுக்களின்மேல் விழவொட்டாது) பாதுகாக்கும்! சேர்ப்ப - கடற்கரைத் துறைமுகத்திற்குரிய தலைவனே, நீ மன்னா வரவு - நீ (அடிக்கடி வந்து போகும்படியான) நிலையில்லாத வருகையை, மற - மறந்து, (நிலையுள்ள வரவினை மேற் கொண்டு தலைவியைப் பாதுகாப்பாயாக.) (ப-ரை.) விரை வாய்த்த முட்டாழையினது நீண் முகையைக் குஞ்சு என்று கருதிக் குருவிகள் அம்முகை வாயிலே இரையைப் பெய்து தாம் அவ்விரையைக் கொள்ளாது உருகி மிக வின்னாத வெயிலைத் தஞ் சிறகால் மறைக்குஞ் சேர்ப்பை யுடையானே! நீ இங்கு வரும் நிலையாத வரவினை மறந்து நிலைக்கும் வரவினைச் செய்வாயாக. (விரி.) ஏ - அசைநிலை, நிலைக்கும் வரவு - வரைவு; மணம் நின்னாட்டுக்குருகுகளும் மகப்பெற்றோம்ப விழைகின்ற போது நீ இங்கனம் மன்னா வரவினை மேற்கொண்டிருத்தல் நன்றன்று; மன்னும் வரவினை மேற்கொள்வது இன்றிமையாதது என்பன கருத்தாம். (36) ஓதநீர் வேலி யுரைகடியாய்ப் பாக்கத்தார் காதனீர் வாராமை கண்ணோக்கி - யோதநீ ரன்றறியு மாதலால் வாரா தலரொழிய மன்றறியக் கொள்ளீர் வரைந்து. [இதுவுமது] (பத.) ஓதம் நீர் - அலைகளையுடைய கடனீர், அன்று - முன்பு (நீர்இவட்குச் சொல்லிய உறுதிமொழிகளை), அறியும் ஆதலால் - தெரிந்து (சான்றாக விருந்து கொண்டிருக்கின்றது) ஆகலின், ஓதம் நீர்-கடலினை, வேலி - பாதுகாவலாகக்கொண்ட, பாக்கத்தார் - (எம்)ஊரார், உரை - அலர் மொழிகளால், கடியா - விலக்கிப் பேசாமலும்,
|