அனையாளை - ஒத்த தலைவியினை, அடா - சமைத்தற் கியலாத, அடகினும் - (கீரை யென்னும் மற்றொரு பொருளினைக் கொண்ட மகளிர்) விளையாட்டுப் பண்ணையிலும், காணேன் - கண்டேனில்லை, மருங்குல் - இடைப்பாகமாகிய இடுப்பானது, கொம்பு அன்னாள் - பூங்கொம்பினை யொத்ததாகிய அவளது, மயிர் - கூந்தலாகிய மயிர்கள், போர் - போர்க்களத்தினிடத்தே, வாடா - பின்வாங்காத, கரும் கொல் - இரும்புக் கொல்லுத் தொழிலையுடைய, வேல் - வேற்படையினைக் கொண்ட, மன்னர்கலம் - அரசர் அணியும் முதன்மை அணிகலமாகிய முடியாக, புக்க கொலோ - ஒன்று கூடி வளர்ந்து (முதுக் குறைவினைக்) காட்டினவோ? (என்று தலைவன் வினவிக் கொணடனன்.) (ப-ரை.) கோடாத புகழையுடைய மாறன் மதுரை யனையாளை அடாத பண்ணையுளுங் காண்கின்றிலேன்; போரின்கண் வாடாத கருங்கொற் றொழிலையுடைய வேல் மன்னர் அணிகலமாகிய முடிகூடின கொல்லோ! இடை யாற்கொம்பை யனையாள் மயிர்கள். (விரி.) அடா = ஆடா: நீட்டல் விகாரம். ஆற்றல் - பொறுத்தல். பெயர்தல் - திரும்பல். அடகு - கீரை, பண்ணை அடாவடகு - பண்ணையாகிய மகளிர் விளையாடுமிடம். தலைவியின் கூந்தலாகிய மயிர்கள் முடியாகக் கொள்ளும் வண்ணங் கூடி அவளின் முதுக்குறைவினைக் காட்டியதால், அவளை இற்செறித்தனர் போலும் என்பது கருத்து. பண்ணை என்பதனை, “அடாவடகு,” என்றதும், முடி என்பதனை, “மன்னர் கலம்,” என்றதும் குறிப்பு மொழிகளாம். “ஆடா வடகு என்று விளையாட்டிற்கு வெளிப்படைநிலை யென்னும் அணியாற் பெயராயிற்று," என்பர் பழையவுரையினை யுடையார். இனி, மயிர்கள் முடி கூடுதல் முதுக்குறைவினையுணர்த்தும், என்பதனைச் சிலப்பதிகாரம் வஞ்சிக் காண்டம் வரந்தரு காதையில் வந்துள்ள, “மையீரோதி வகைபெறு வனப்பின், ஐவகை வகுக்கும் பருவங் கொண்டது,” என வரும் 10, 11-வது அடிகளின் பொருளாற் றெளிக. கருங்கொல் - இரும்புத்தொழில். (4)
|