வருமென்பது மரபு. சென்றார் - வெற்றியினை வேண்டிப் பிரிந்து சென்றவரென்றுமாம். (80) உருவவேற் கண்ணாய்! ஒருகாற்றேர்ச் செல்வன் வெருவிவீந் துக்கநீ ளத்தம் - வருவர் சிறந்து பொருடருவான் சேட்சென்றா ரின்றே யிறந்துகண் ணாடு மிடம். [இதுவு மது.] (பத.) உருவ வேல் கண்ணாய் - அழகிய வேலினை யொத்த கண்களையுடைய தலைவியே! இடம் கண் - எனது இடக்கண்ணானது, இறந்து - மிகுந்து, ஆடும் - ஆடா நின்றது, (ஆகலான்) ஒரு கால் - ஒற்றையாழியினையுடைய, தேர் செல்வன் - தேரில் அமர்ந்து செல்பவனாகிய கதிரவனால், வெருவி - (கண்டார்க்கு) அச்சமுண்டாகும்படி, வீந்து - மடிந்து, உக்க அவிந்துபோன, நீள் - நீண்ட, அத்தம் - பாலைநில வழியாக, பொருள் தருவான் - பொருள் தேடும் பொருட்டு, சிறந்து - (முயற்சியில்) மேம்பட்டு, சேண் சென்றார் - நெடுந் தொலை சென்ற தலைவர், இன்று ஏ வருவர் - இற்றைநாளே வந்து சேர்வர். (துன்புறா திருப்பாயாக, என்று தலைவிக்குத் தோழி கூறினாள்.) (ப-ரை.) அஞ்சத் தக்கவேல்போன்ற கண்களை யுடையாய்! ஒரு காலையுடைய தேர்ச் செல்வனாற் பிறர் கண்டார் வெருவும் வகை வீந்தவிந்த கானத்தானே முயற்சியாற் சிறந்து பொருடருவான் வேண்டிச் சென்றவர் இன்றே வருவர்; மிக்குக் கண் இடமாடா நின்றது. (விரி.) வெருவி - வெருவ: எச்சத் திரிபு. பொருள் + தருவான் = பொருடருவான்; இரண்டன் தொகை. ஏ - பிரிநிலை. (81) கொன்றாய்! குருந்தே! கொடிமுல்லாய்! வாடினீர் நின்றே னறிந்தே னெடுங்கண்ணாள் - சென்றாளுக் கென்னுரைத்தீர்க் கென்னுரைத்தாட் கென்னுரைத்தீர்க் கன்னுரைத்தாண் மின்னிரைத்த பூண்மிளிர விட்டு.
|