[தலைமகள் இற்செறிப்புக் கண்டபின்னை அவள் நீங் கிய புனங்கண்டு ஆற்றானாய் மீள்கின்ற தலைமகன் சொல்லியது; அன்றி, சுரத்திடைச் சென்ற செவிலித்தாய் சொல்லிய தூஉமாம்] (பத) கொன்றாய் - கொன்றைமரமே! குருந்தே - குருந்தமரமே! கொடிமுல்லாய் - கொடிகளாகப் படர்ந்துள்ள முல்லைச் செடியே! வாடினீர் - நீங்கள் மிகவும் வாட்டமுற்றுக் காண்கின்றீர்கள். நின்றேன் - (உங்கள் எதிரில்) நிற்பேனாகிய யான், அறிந்தேன் - (இவ்வாட்டத்திற்குக் காரணமாகிய செய்தி தலைவியுடன் நீங்கள் உரையாடியதே என்பதைத்) தெரிந்துகொண்டேன். நெடும் கண்ணாள் - நீண்ட கண்களையுடைய தலைவியாகிய, மின் நிரைத்த - ஒளியமைந்து தோன்றும், பூண் - அணிகலன்கள், மிளிரவிட்டு - ஒளி விடும்படி செய்துகொண்டு, சென்றாளுக்கு - இவ்விடத்தினின்றும் சென்றவளுக்கு, என் உரைத்தீர் கு - யாது கூறினீர்கள்? நுமக்கு, என் உரைத்தாள் கு - (அவள்) யாது கூறினாள்? அவட்கு, என் உரைத்தீர் கு - (பின் நீங்கள்) யாது கூறினீர்கள்? நுமக்கு, என் உரைத்தாள் - அவள் பின்னர் யாது கூறினாள்? (என்று தலைவன் தன்னாற்றாமையான் வினவினன்.) (ப-ரை.) கொன்றாய்! குருந்தே! கொடி முல்லாய்! நீர் வாடிநின்றீர்; இதற்குக் காரணம் யானறிந்தேன்; நெடுங் கண்ணாள் இங்கு நின்று போகின்றாட்கு நீர் என்னுரைத்தீர்? நுமக்கு அவள் என்னுரைத்தாள்? அவட்கு நீர் பின்னை என்னுரைத்தீர்? அவள் உமக்குப் பின்னை என்னுரைத்தாள், மின்னிரைத்த பூண் விட்டு மிளிராநின்று? (விரி.) இற்செறிப்புக் காணல் - மனையகம்புகல், சுரத்திடைத்சென்ற - உடன் போக்கினை மேற்கொண்ட தலைவியைத் தேடிக்கொண்டு பாலை நிலவழியே சென்ற. வறுங்களங் கண்டு மயங்கிய தலைவன் அங்கு நின்ற கொன்றை முதலியவற்றினோடு இங்ஙனம் வினாவினான் என்பது கருத்து. அன்றி, தலைவியை நாடிச் சென்ற செவிலி சுரத்திடைக் கண்ட கொன்றை முதலியவற்றுடன் ஆற்றாமை மிகுதியான் இங்ஙனம் வினவினாள்
|