80

என்பதுமாம்.இற்செறிப்புக் காரணமாகப் புனத்தை விட்டு நீங்குந் தலைமகள் மாட்டுக் கொன்றை முதலியன வினவும் வினாவும் விடையும் தலைமகன் பேரில் பரிவுடையனவாக வேண்டுதலின், "சென்றாளுக் கென்னுரைத்தீர்க் கென்றுரைத்தாட் கென்னுரைத்தீர்க் கென்னுரைத்தாள்?" என்று உரையாடிய முறையை விரித்துத் தலைமகன் வினவலாயினன் என்க.

(82)

ஆண்கட னாமாற்றை யாயுங்கா லாடவர்க்குப்
பூண்கடனாப் போற்றிப் புரிந்தமையாற் - பூண்கடனாச்
செய்பொருட்குச் செல்வராற் சின்மொழி! நீசிறிது
நைபொருட்கட் செல்லாமை நன்று.

[தலைமகனது செலவுக்குறிப்பறிந்து ஆற்றாளாய தலை
மகளைத் தோழி உலகினதியற்கை கூறி ஆற்றியுடன்படு
வித்தது]

(பத.) சில் மொழி - சிலவாகிய தீஞ் சொற்களையுடைய தலைவியே! ஆண் கடன் ஆம் - ஆண் தன்மையின் கடமையாகிய, ஆற்றை - நெறியினை, ஆயுங்கால் - இன்னதென ஆராயுமிடத்து, ஆடவர்க்கு - ஆண்மக்களுக்கு, பூண் கடன் ஆ - மேற்கொள்ள வேண்டிய கடமையாக, போற்றி - (பொருள் தேடுதலைப் பெரியோர்) ஏற்பாடு செய்து, புரிந்தமையால் - வைத்தபடியினாலே, பூண் கடன் ஆ - (அவ் வாண்மக்கள்) மேற் கொள்ள வேண்டிய கடமையாக, செய் பொருள் கு - தேடவேண்டிய பொருளுக்கு, செல்வர் - நங்காதலர் செல்லவேண்டியவராவர், ஆல் - ஆதலால், நீ சிறிது - நீ சிறிது காலம், நை பொருள் கண் - பிரிவால் வருந்துகின்ற வகையிலே, செல்லாமை - புகாது ஆற்றி யிருத்தல், நன்று - நன்மையாகும். (என்று தலைவிக்குத் தோழி கூறினாள்.)

(ப-ரை.) ஆள்வினைக் கடனாகிய நெறியை ஆராயுங்கால், ஆடவர்க்குப் பூணுங் கடனாகப் பாதுகாத்து நல்லார் சொல்லி மேவினமையாற் றமக்கு அவ் வாள்வினை பூணுங் கடனாகத் தேடும் பொருட்டுச் செல்வர் நங் காதலர்; ஆதலாற் சின்மொழியை யுடையாய்! நீ யதற்கு மனனழியுந் திறத்தின்கட் செல்லாமை நன்று.