(விரி.) உலகினதியற்கை - ஆண் மக்கள் பொருள் தேடுதல். சின்மொழி - பண்புத் தொகை யன்மொழி: சுருங்கப் பேசும் சொல்லழகு பற்றி வந்தது. போற்றுதல் - பாதுகாத்தல்: இன்னார்க்கிது வென ஏற்பாடு செய்தல். செய்தல் - பொருள் தேடுதலைச் செய்தல். நை பொருள் - துன்பம். நல்லார் - பெரியார். (83) செல்பவோ சிந்தனையு மாகாதா னெஞ்செரியும் வெல்பவோ சென்றார் வினைமுடிய - நல்லாய்! இதடி கரையுங்கன் மாபோலத் தோன்றிச் சிதடி கரையுந் திரிந்து. [தலைமகன் செலவுணர்த்திய தோழிக்குத் தலைமகள் உடன்படாது சொல்லியது] (பத.) நல்லாய் - நல்ல தோழியே! இதடி - காட்டு எருமைகள், கரையும் - (பிரிந்துபோன காட்டெருமைப் போத்துக்களை நினைத்துக்) கதறா நிற்க விடமாயதும், கல் - (அங்குப் பலவாய்க் கிடக்கும்) கற்களும், மா போல - யானைகள் பரவி நிற்பன போல, தோன்றி - தோன்ற, சிதடி - சிள் வண்டுகள், திரிந்து - பல்லிடங்களிலும் சென்று கலந்து, தரையும் - ஒலிப்பதற்கு இடமாயது மாகிய (பாலை நிலவழியே,) செல்பவோ - எவராயினும் செல்ல விரும்புவா ருண்டோ? சிந்தனையும் ஆகாது - அச்செலவினை நினைத்தலும் கூடாத தொன்றாகும், நெஞ்சு எரியும் - நினைத்த நெஞ்சு எரிந்து துன்புறும், சென்றார் - இவற்றை யெல்லாம் பொருட் படுத்தாது சென்றவர்களும், வினைமுடிய - தாம் எடுத்துக் கொண்ட காரியம் முடிவு பெறும்படி, வெல்பவோ - அப் பாலை நிலவழியே சென்று மீளுதலாகிய வெற்றியை மேற்கொள்ள வல்லராவரோ (ஆகார்; ஆகலின், நம் தலைவர் பொருள் வயிற் பிரிதல் பொல்லாத தொன்றாம், என்று தலைமகள் தோழியிடங் கூறினாள்.) (ப-ரை.) இப்பெற்றித்தாகிய சுரத்தின்கட் செல்வாருளரே? நினைத்தலு மாகாதால்; நினைத்த நெஞ்சும் எரியும்; மாறிச் சுரத்தின்கட் சென்றார் சுரத்தை வெல்ல வல்லவரோ? தாமெடுத்துக் கொண்டவினை முடியும்படி;
|