நல்லாய்! காட்டெருமைப் போத்துக்களைப் பிரிந்த பெண் எருமைகள் கதறா நிற்கும்; அங்குப் பலவாய்க் கிடந்த கற்களும் மா பரந்தாற்போலத் தோன்றும்; சிள் வீடுகளும் திரிந்து கதறா நிற்கும் ஆதலான். (விரி.) உடன் படல் - சம்மதித்தல். தோன்றி - தோன்ற: எச்சத்திரிபு. சிதடி - சிள்வீடு: சிள்வண்டு. (84) கள்ளியங் காட்ட கடமா விரிந்தோடத் தள்ளியுஞ் செல்பவோ தம்முடையார் - கொள்ளும் பொருளில ராயினும் பொங்கெனப்போந் தெய்யு மருளின் மறவ ரதர். [இதுவுமது] (பத.) கொள்ளும் - கொள்ளை கொள்ளுதற்குரிய, பொருள் இலராயினும் - பொருளை வழிச் செல்வோர் கொண்டிலராயினும், அருள் இல் மறவர் - வன்கண்மை மிக்க பாலை மக்களாகிய மறவர்கள், பொங்கு என - திடீரென்று, போந்து - வழியிடைத் தோன்றி, எய்யும் - (அவர்களை) எய்து கொல்லும். அதர் - பாலைநிலவழியாகிய, கள்ளியம் காட்ட - கள்ளிகள் வளர்ந்து மிகுந்த காட்டில், தம் உடையார் - தமக்கென அறிவினையுடையார் எவரும், கடமா - காட்டுப்பசுக்கள், இரிந்து ஓட - பின்வாங்கியோடும்படி, தள்ளியும் - மறந்தும், செல்பவோ - செல்வாரோ? (செல்லமாட்டார்; ஆகலின், நம் தலைவர் பொருள்வயிற் பிரிதல் நன்றன்று, என்று தலைவி தோழியிடங் கூறினாள்.) (ப-ரை.) கள்ளியங் காட்டின்கட் கடமாக்கள் இரிந் தோடும் வகை மறந்துஞ் செல்வரோ தம் மறிவை யுடையார்? வழிபோம் வம்பலராற் கொள்ளும் பொருளிலராயினும் கதுமெனப் போந்தெய்கின்ற அருளில்லாத மறவர் வாழும் வழியை. (விரி.) பொங்கெனல் - ஒலிக்குறிப்பு. தம்முடையார் அதராகிய காட்ட, ஓட, செல்பவோ, என முடிக்க. வம்பலர் - புதியர். (85)
|