பொருள்பொரு ளென்றார்சொற் பொன்போலப் போற்றி யருள்பொரு ளாகாமை யாக - வருளான் வளமை கொணரும் வகையினான் மற்றோ ரிளமை கொணர விசை. [தலைமகனைத் தோழி செலவழுங்குவித்தது] (பத.) பொருள் - (எல்லாவற்றையும் இனிதின் நிறைவேற்றும்) பொருளே, பொருள் - யாவரும் கருத்திற் பதிக்கவேண்டிய காரியமாகும். என்றார் - என்று உமக்கு எடுத்துச் சொன்னவர்களுடைய, சொல் - சொல்லை, பொன்போல - பொன்னைப் போன்று, போற்றி - நீர் மேற்கொண்டு திரிதலான், அருள் - (பெண்பாலாகிய தலைவியின்மாட்டுக் காட்டவேண்டிய) அன்பின் மிகுதியாகிய அருளும், பொருள் ஆகாமை ஆக - கருதவேண்டிய காரியமாகக் கொள்ளப்படாது போயினும் போகுக, வளமை கொணரும் வகையினால் - நீ சென்று பல்வளங்களையும் தரும் பொருளைக் கொண்டுவரும் வலிகொண்டு, அருளான் - அன்பு கூர்ந்து, மற்று ஓர் - (பின்பு நாம் பெறுதற்கியலாத) வேறோர், இளமை - இளமையாகிய தன்மையை, கொணர - அங்கிருந்து கொண்டுவருவதற்கு, இசை - உடன்படுவாயாக. (என்று தோழி தலைவனிடங் கூறினாள்.) (ப-ரை.) பொருள் பொருளாவதென்று சொன்னார் சொல்லைப் பொன்போல விரும்பித் தெளிதலான், அருளுடைமை பொருளாகாமை ஆவதாயினும் ஆக; பொருளைக் கொணரும் வகைமைபோல நின்னருளினாலே வேறோரிளமை கொணர்தற்கு எமக் குடன்படுவாயாக. (விரி.) பொருளால் யாவும் முடிக்க வியலுமெனக் கருதிப் பொருள் தேடப் புகும் புரவலனே! நீ தேடும் பொருள் கொண்டு, சென்றுவிடும் இளமையினைப் பெற உனக்கு இயலுமோ? இயலாது, என்று தோழி தலைவனிடங் கூறினாள் என்பதும், அது கேட்டுத் தலைமகன் பொருள் தேடச் செல்லுதலினின்றும் விலகி மனங்கலங்கலாயினன் என்பதும் கருத்துக்களாம். செலவு அழுங்கு வித்தல் - செல்லுதலினின்றும் தவிர்வித்து வருந்தச் செய்தல். (85)
|