ஒல்வா ருளரே லுரையா யொளியாது செல்வாரென் றாய்நீ சிறந்தாயே - செல்லா தசைந்தொழிந்த யானை பசியாலாட் பார்த்து மிசைந்தொழியு மத்தம் விரைந்து. [தலைமகள் தோழிக்குச் செலவுடன்படாது சொல்லியது] (பத.) செல்லாது - போகமாட்டாது, அசைந்து - வருந்தி, ஒழிந்த - இறந்து வீழ்ந்த, யானை - யானைகளை, ஆள் - அங்குள்ளவர்கள், பசியால் - தமது பசி மிகுதியினாலே, பார்த்து - தேடிப் பார்த்து, மிசைந்து ஒழியும் - தின்று செல்லும்படியுமான, அத்தம் - பாலைநில வழியே, விரைந்து - விரைவாக, ஒளியாது - மறைக்காமல், செல்வார் - நங்காதலர் செல்வது உறுதி, என்றாய் - என்று சொன்னாய், (ஆதலால்,) நீ சிறந்தாய் ஏ - நீ எனக்கு மெய்யாகச் சிறந்த தோழியே யானாய், (ஆயினும்,) ஒல்வார் உளரேல் - ஆற்றுவார் எவரேனு மிருப்பின், உரையாய் - காதலர் பிரிவினை அவர்கட்குச் சென்று உரைப்பாயாக. (என்பால் உரைக்க வேண்டுவதின்று, என்று தலைவி தோழியிடங் கூறினாள்.) (ப-ரை.) ஆற்றுவர் ருளராயின், அவர் பிரிவினை அவர்கட்கு உரையாய்; தவிராதே நங்காதலர் செல்வா ரென்றாய்; ஆதலால், நீ எனக்கு மெய்யாகச் சிறந்தாயே யன்றோ? போகமாட்டாதே வருந்தி யிறந்து வீழ்ந்த யானைகளை அங்குள்ளவர்கள் தம் பசியானே எங்கும் பார்த்துத் தின்று போம் அத்தத்தினை விரைந்து. (விரி.) கொடிய பாலைநில வழியாகத் தலைவர் பிரிந்து செல்வார் என்பதை மறையாது கூறிய முறையில் நீ கொண்டாடத் தக்கவளே ஆயினும், இதனை ஆற்றுவார் மாட்டுக் கூறுதலே நல்லதாம் என்று தலைவி தோழியினை நோக்கிக் கூறினாள் என்பது கருத்து. பழையவுரையில், "தவிராதே நங்காதலர் செல்வர்," எனக் காண்பதற்கு, "ஒழியாது," எனப் பாடத்தைத் திருத்திக் கொள்வது பொருந்துமாறு காண்க. பாலைநிலவழி உணவும் நீருமின்றி வறந்திருத்தலின், "செல்லாது அசைந் தொழிந்த யானை பசியாலாட் பார்த்து மிசைந் தொழியும்,"
|