பகலோனன்னானை யான்கண்டேன், கண்டாளாம் தண்மதியனையாளை இவள்தான். (விரி.) சுரத்திடைச் சென்ற - உடன் போக்கினை மேற்கொண்ட தலைவன் தலைவியரைத் தேடிக்கொண்டு பாலைநில வழியே போன. எதிர்ப்பட்டார் - எதிரே தோன்றிய கணவன் மனைவியராகிய இருவர். செவிலி வயதில் முதிர்ந்தவ ளாதலால் நீர் என உயர்வுப் பன்மை கொடுக்கப்பட்டாள். எதிர்ப்பட்ட இருவரில் ஆடவன் பிறன்மனை நோக்காப் பேராண்மை யுடையனாகலின், "கண்டாளாந் தண்சுடரன்னாளைத் தான்," எனக் கூறலாயினன். (89) வேறாக நின்னை வினவுவேன் றெய்வத்தாற் கூறாயோ கூறுங் குணத்தினனாய் - வேறாக வென்மனைக் கேறக் கொணருமோ வெல்வளையைத் தன்மனைக்கே யுய்க்குமோ தான். ["தன்னு மவனும்," என்பதனுள், "நன்மை தீமை," என்பதனால் நற்றாய் படிமத்தாளை வினாயது] (பத.) நின்னை - உன்னை, வேறு ஆக - நிமித்தஞ் சொல்வார் பலருள்ளும் வேறாகக் கொண்டு, வினவுவேன் - யான் கேட்கின்றேன் (ஆதலால்,) தெய்வத்தால் - உன் தெய்வத்தன்மை மிக்க கழங்கினாலே, எல் வளையை - ஒளி மிக்க வளையணிந்த என் மகளை (உடன்கொண்டு சென்றவன்,) கூறும் - (உலகத்தார் புகழ்ந்து) சொல்லும், குணத்தினனாய் - நற்குணத்தினைக் கொண்டவனாய், என் மனைக்கு - எனது மனைக்கண், ஏற - (மணவிழாச் சிறப்புப்) பொருந்தும் வண்ணம், கொணருமோ - (அவளைக்) கொண்டு வருவானோ? (அல்லது,) தன்மனைக்கு ஏ - தனது மனைக்கண்ணேயே, உய்க்குமோ - அவளைக் கொண்டுபோய்ச் சேர்ப்பானோ? (என்று,) கூறாய் - கூறுவாயாக (என்று நற்றாய் படிமத்தாளை வினாவினாள்.) (ப-ரை.) நிமித்தஞ் சொல்வார் பலருள்ளும் நின்னை வேறாகக்கொண்டு வினவாநின்றேன்: உன்னுடைய தெய்வத்தன்மையுடைய கழங்காற் பார்த்துக் கூறாய்;
|