93

தலைவி தலைவன் வருகையை எதிர்பார்த்துக் கற்பாற்றியிருக்கும் ஒழுக்கமாம். அவ்வொழுக்கத்திற்குக் காரணமாயவைகளும் ஈண்டுக் கொள்ளப்படும். கற்பாற்றியிருந்த தலைமகள் தலைவன் திரும்புவதாகக் குறித்துச் சென்ற கார்ப்பருவங் கண்டு கலங்கிக் கூறியதாகு மிச் செய்யுள்.

(93)

பகல்பருகிப் பல்கதிர் ஞாயிறுகல் சேர
விகல்கருதித் திங்க ளிருளைப் - பகல்வர
வெண்ணிலாக் காலு மருண்மாலை வேய்த்தோளாய்!
உண்ணிலா தென்னாவி யூர்ந்து.

[இதுவு மது.]

(பத.) வேய் தோளாய் - மூங்கிலினை யொத்த தோள்களையுடைய தோழியே! பல்கதிர் - பலவாகிய கதிர்களைக் கொண்ட, ஞாயிறு - பகலவன், பகல் - பகற்பொழுதிற்குரிய வெளிச்சத்தினை, பருகி-தன்னுள் வாங்கிக்கொண்டு, கல் சேர - மேற்கு மலைத்தொடரிற் சென்று மறைய, (அதனால் இருள் பரவ) திங்கள் - மதியானது, இருளை - அவ்விருளை, இகல் - (வெளிச்சத்தினை விலக்கிய) பகையென்று, கருதி - எண்ணி, பகல் - (மறைந்துபோன வெளிச்சத்தோடு கூடிய) பகல் வேளை, வர - திரும்பவும் தோன்றும்படியாக, வெண்நிலா - வெள்ளிய நிலவொளியினை, காலும் - வெளிவிட்டு விரட்டும்படியான, மருள்மாலை - மயக்கத்தைத் தரக்கூடிய மாலைப் பொழுதின்கண், என் ஆவி - எனது உயிர், ஊர்ந்து - வெளிப்பட்டு, உள் நிலாது - என்னிடத்துத் தங்கி நிலைப்பதில்லை. (என்று தலைவி தோழியினிடத்துக் கூறினாள்.)

(ப-ரை.) பகற் பொழுதைப் பருகிப் பல்கதிர்ஞாயிறு மலையின்கட் சேர, திங்ளானது இருளைப் பகையென்று கருதிப் பகலின்றன்மை வர வெண்ணிலாவை யுகாநின்ற மருண்மாலையின்கண், வேய்த்தோளாய்! என்னிடத்து நிலைகின்றதில்லை; என்னுயிர் சென்று.

(விரி.) 'திங்கள், ஞாயிறுகல் சேர, இருளை இகல் கருதி, பகல்வர, நிலாக்காலும், மாலை, என முடிக்க. வேய்த்தோள் - உவமைத் தொகை.

(94)